மகாராஷ்டிராவில் விற்பனையை அதிகரிக்க மதுபானங்களுக்கு பெண்கள் பெயர் சூட்டலாம்: பாஜ அமைச்சர் பேச்சால் சர்ச்சை
11/7/2025 3:08:33 PM
மும்பை: விற்பனையை அதிகரிக்க மதுபானங்களுக்கு பெண்கள் பெயரை சூட்டலாம் என்ற மகாராஷ்டிரா பாஜ அமைச்சர் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் முதல்வர் பட்நவிஸ் தலைமையிலான பாஜ-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அவையில் அமைச்சராக இருப்பவர் கிரிஷ் மகாஜன்.
அண்மையில் நடைபெற்ற விழாவில் கிரிஷ் மகாஜன் பேசுகையில், மாநிலத்தில் மது விற்பனை குறைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். மது பானங்களுக்கு மகாராஜா போன்ற ஆண் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளதுதான் காரணம். அதற்கு பதிலாக ராணி போன்ற பெண் பெயரை சூட்டினால் மது விற்பனை சூடு பிடிக்கும்.
அதே போல் பான் போன்ற அயிட்டங்களுக்கும் கமல்,விமல், சுமன் என்ற ஆண்கள் பெயராகவே உள்ளது. அதற்கும் பெண் பெயரை வைத்து பாருங்கள் விற்பனை தூள் பறக்கும் என்றார்.அவரது இந்த பேச்சு மகாராஷ்டிராவில் மிகப் பெரிய அளவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதை கண்டித்து பெண்கள் சங்கத்தினர் சந்திராப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில் அமைச்சரின் பேச்சுக்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில், மதுவின் பாதிப்புகள் குறித்து அரசு பிரசாரம் செய்து வருகிறது. ஆனால் மது விற்பனையை அதிகரிக்க செய்வது குறித்து அமைச்சர் விஷம பிரசாரம் செய்கிறார்.
பீகாரில் பூரண மதுவிலக்கை கொண்டு வந்ததற்காக நிதிஷ்குமாரை பிரதமர் மோடி பாராட்டுகிறார். ஆனால் அவரது கட்சியின் மற்றொரு அமைச்சரோ மிகவும் மலினமான முறையில் மதுவுக்கு பிரசாரம் செய்கிறார். அதிலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆலோசனைகளை வேறு அள்ளி வழங்குகிறார் என்று சாடியுள்ளது.இதையடுத்து மும்பையில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் கிரிஷ் மகாஜன் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.