17 ஆயிரம் கோடி டெபாசிட் விவகாரம் 35 ஆயிரம் நிறுவனங்கள் பதிவு ரத்து: மத்திய அரசு நடவடிக்கை
11/7/2025 3:06:50 PM
புதுடெல்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின், வங்கிகளில், 17 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்திய, 35 ஆயிரம் நிறுவனங்களின் பதிவை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது.கருப்பு பணத்தை ஒழிக்க, பழைய, 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதென, கடந்தாண்டு நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, வங்கிக் கணக்கில், அதிகளவு பணம் டெபாசிட் செய்தவர்கள் குறித்த தகவல்களை, மத்திய அரசு திரட்டியது.இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், வங்கி கணக்குகளில், 17 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்திய, 35 ஆயிரம் நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக, செயல்படாத, 2.24 லட்சம் நிறுவனங்களின் பெயர்கள், அதிகாரப்பூர்வ பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. நிறுவனங்கள், இயக்குனர் குழுவுக்கு போலியான இயக்குனரை நியமிப்பதை தடை செய்யும் வகையில் புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இயக்குனர் பதவிக்கான புதிய விண்ணப்பத்துடன், பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.