பண மதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் பொருளாதார தவறு: மோடி ஒப்புக் கொள்ள மன்மோகன் சிங் வலியுறுத்தல்
11/7/2025 3:06:08 PM
புதுடெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கை மிகப் பெரிய பொருளாதார தவறு என்பதை பிரதமர் மோடி ஒப்புக் கொள்ள வேண்டும் என மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.நாடு முழுவதும் கருப்பு பண மீட்பு நடவடிக்கைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இதனால் கரன்சிகளை மாற்றுவதற்காக வங்கிகளில் வரிசையில் நின்ற பொது மக்கள் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் கருப்பு பணத்தையும் பெரிய அளவில் மீட்க முடியவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
பண மதிப்பிழப்பு அறிவித்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அதை நாடு முழுவதும் அனுசரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த சூழலில் பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவற்றை குறிவைத்து குஜராத் தேர்தல் களத்தில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குஜராத்தில் பிரசாரம் செய்ய உள்ளார்.இந்த சூழலில் தனியார் ஆங்கில டிவி சேனல் ஒன்றிற்கு மன்மோகன் சிங் அளித்த பேட்டியில், பண மதிப்பிழப்பு சமூகத்தில் பலவீனமாக இருந்தவர்களையும், சிறிய தொழில்களையும் அதிகம் பாதித்துள்ளது. பணமதிப்பிழப்பை முன்வைத்து செய்த அரசியலுக்கான தருணம் முடிந்து விட்டது என நான் உறுதியாக நம்புகிறேன். பிரதமர் மோடி தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள வேண்டும்.
தவறை ஏற்றுக் கொண்டு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் பொருளாதாரத்தை மீண்டும் சரி செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது. பொருளாதார கொள்கைகளில் நிலையான கொள்கை கொண்ட தேசம் இந்தியா என்ற நற்பெயருக்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை களங்கம் ஏற்படுத்தி விட்டது என்று விமர்சித்துள்ளார்.பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு தினமான நவம்பர் 8ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.