மோடி, அமித்ஷாவுக்கு செல்வாக்கான பகுதிகளில் ராகுல் தேர்தல் பிரசாரம்
11/6/2025 4:54:22 PM
காந்திநகர் : குஜராத்தில் பிரதமர் மோடி, பாஜ தலைவர் அமித்ஷாவுக்கு செல்வாக்குள்ள பகுதிகளில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 3ம் கட்டமாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.குஜராத் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து 3 கட்ட பிரசார பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். முதல் கட்ட பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி தொடக்கத்தில் மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி போன்றவற்றில் பிரதமர் நரேந்திர மோடியை குற்றம்சாட்டிப் பேசினார்.
இரண்டாம் கட்ட பயணத்தில் படேல் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் ஜாம் நகரைச் சுற்றி உள்ள கிராம பகுதிகளில் ராகுல் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக் கொண்டார். 3வது கட்ட தேர்தல் பிரசார பயணமாக வருகிற 11ம் தேதி பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரின் செல்வாக்குள்ள பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதைத் தொடர்ந்து மத்திய குஜராத், தெற்கு குஜராத், சவுராஷ்டிரா பிராந்தியங்களில் சுற்றுப் பயணம் செய்கிறார். இதைத் தொடர்ந்து காங்கிரசுக்கு செல்வாக்கு உள்ள வடக்கு குஜராத் பகுதிகளில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இங்கு 2012ம் ஆண்டு 32 தொகுதிகளில் 18 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. குஜராத்தில் வெள்ளம் ஏற்பட்ட போது இதே வடக்கு குஜராத்தில் பனாஸ் தந்தா பகுதிகளில் ராகுல் சுற்றுப் பயணம் செய்த போது ராகுல் காந்தியின் கார் மீது கல் எறிந்தது குறிப்பிடத்தக்கது.