அக். முதல் ஜனவரி வரை 6 கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுகிறார்
10/29/2017 2:24:56 PM
பெங்களூரு: கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ள நிலையில் அக்டோபர் தொடங்கி ஜனவரி வரையிலான கால கட்டத்தில் பிரதமர் மோடி 6 கூட்டங்களில் பேச பாஜ முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் முதல்வர் சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு பாஜ தீவிரமாக தயார் ஆகி வருகிறது. எப்படியும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது. இதை யொட்டி பிரதமர் மோடி இன்று தொடங்கி ஜனவரி வரையில் 6 பொது கூட்டங்களில் பேச பாஜ முடிவு செய்துள்ளது.
அதே நேரத்தில் டிசம்பர் 21ம் தேதி ஹுப்ளியில் நடைபெறும் பிரதமர் மோடி கூட்டத்திற்கு சுமார் 3 லட்சம் பேரை திரட்ட பாஜ திட்டமிட்டுள்ளது.
மேலும் பாஜ தலைவர் அமித்ஷா நவம்பர் 2ம் தேதி பெங்களூருவில் இருந்து பிரசார யாத்திரையை தொடங்குகிறார். மோட்டார் சைக்கிள் பேரணியாக 114 தொகுதிகளில் இருந்து பாஜவினர் பங்கேற்கின்றனர். ஜனவரி 25ம் தேதிக்குள் 224 தொகுதிகளையும் உள்ளடக்கி செல்லும் இந்த பிரசார யாத்திரை மைசூருவில் முடிகிறது.
இந்த யாத்திரையின் போது பாஜ முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா சுமார் 500 பொது கூட்டங்களில் பேசுகிறார். அதே போல் 55 ஆயிரம் வாக்கு சாவடிகளில் தலா 9 பேர் கொண்ட குழுவை அமைத்து வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நேரடி வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளிலும் பாஜ இறங்கியுள்ளதால் கர்நாடக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. மேலும் பாஜ நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அதன் பொது செயலாளர் முரளிதர் ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.