போலீசாருடன் துப்பாக்கி சண்டை 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை
10/29/2017 2:23:56 PM
ஸ்ரீநகர்: காஷ்மீரில் போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். காஷ்மீரில் அண்மைக்காலமாக போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. மேலும் எல்லை பகுதியில் பாகிஸ்தான் படையினரும் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பா துகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில் காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள பந்திபோரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஹாஜின் என்ற பகுதியில் மொகல்லா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.
இதையடுத்து போலீசாரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் காஷ்மீர் போலீஸ் கான்ஸ்டபிள் ஷாகில் அப்பால் என்பவர் வீர மரணம் அடைந்தார்.
இதற்கிடையில் போலீசார் மீது கற்களை வீசி கிராமவாசிகள் சிலர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை விலகி செல்லுமாறு தொடர்ந்து பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.
அதே போல் பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுடன் ஏற்பட்டுள்ள துப்பாக்கி சண்டை காரணமாக காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது.