‘பணிப்பெண்ணாக இருந்து சகோதரியாக மாறியவர் சசிகலா’ எதற்கும் ஓர் எல்லை உண்டு தினகரனுக்கு அமைச்சர் எச்சரிக்கை
10/29/2017 2:22:31 PM
திண்டுக்கல்: ‘‘பணிப்பெண்ணாக இருந்து சகோதரியாக மாறியவர்தான் சசிகலா. கட்சி முன்னோடிகளை கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி டிடிவி தினகரன் பேசி வருகிறார். எதற்கும் ஒரு எல்லை உண்டு’’ என திண்டுக்கல்லில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசினார். திண்டுக்கல் மணிக்கூண்டு மெயின் ரோட்டில் அதிமுக பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: ஜெயலலிதா இறந்து ஓராண்டு நிறைவடைய உள்ளது. அம்மாவின் ஆன்மா மேலே இருந்து பார்த்து கொண்டுதான் உள்ளது.
அதிமுகவை அழிக்க சதி திட்டம் தீட்டி கொண்டிருப்பவர்கள் யார் என்று தெரிந்து கொள்வார். கடந்த 32 ஆண்டுகளுக்கு முன் சாதாரண பணிப்பெண்ணாக இருந்து சகோதரியாக மாறியவர்தான் சசிகலா. இவரது உறவினராக ஒட்டி கொண்ட டிடிவி தினகரன் அதிமுகவை ஆளப்பார்க்கிறார். இதனால் கட்சியின் முன்னோடிகளை கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசி வருகிறார். எதற்கும் ஒரு எல்லை உண்டு. டெங்கு நோய் குறித்து தகவலை தெரிவிக்க மத்திய அரசு தமிழக முதல்வரை டெல்லிக்கு அழைத்தது. இதை பெருந்தன்மையோடு ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்சை டெல்லிக்கு அனுப்பி பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்தார். இவ்வாறு அவர் பேசினார்.
உளறல் பேச்சு
அமைச்சர் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி என சொல்வதற்கு பதிலாக பிரதமர் மன்மோகன்சிங் என உளறினார். இதனால் மேடையில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.