எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியில் நடிகர் கமல் நேரில் ஆய்வு
10/28/2017 2:46:10 PM
சென்னை: எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியில் நடிகர் கமல்ஹாசன் இன்று அதிகாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மீஞ்சூர் அடுத்த வடசென்னை அனல் மின்நிலையம் அமைய, கடந்த 1994-ம் ஆண்டு மீஞ்சூர் அருகே எண்ணூர், சால்ட் லைன் ஆகிய 2 கிராமங்களை சேர்ந்த 700 குடும்பத்தினரின் இடங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் கிரயமாக பெற்றுக் கொண்டது. பின்னர் தங்களது நிலங்களை வழங்கியவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு வேலை மற்றும் வீட்டுமனை வழங்கவும் ஒப்புக்கொண்டது.அதன்பிறகு, அத்திப்பட்டு அருகே அத்திப்பட்டு புதுநகரை உருவாக்கி, எண்ணூர் மற்றும் சால்ட் லைன் கிராம மக்களுக்கு வீட்டுமனைகளை வழங்கியதுடன், அவர்களுக்கு தமிழக மின்வாரியம் வேலைவாய்ப்பை வழங்கியது.இதேபோல் சால்ட் லைன் அருகே காட்டுப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த செப்பாக்கம் என்ற கிராமத்தில் 70 குடும்பங்களை சேர்ந்தவர்களும் வடசென்னை அனல் மின்நிலையத்தில் தினக்கூலியாக வேலைபார்த்தனர்.இந்த வடசென்னை அனல் மின்நிலையத்திற்கு தேவையான நிலக்கரி ஒடிசா மாநிலத்தில் இருந்து கப்பல் மூலம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து கன்வேயர் பெல்ட் மூலம் வடசென்னை அனல் மின்நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள 2 மின் அலகுகளில் இந்நிலக்கரி மூலம் 1830 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
இந்த மின்சார தயாரிப்பின்போது கழிவாக வெளியேறும் நிலக்கரி சாம்பல் செப்பாக்கம், செங்கழுநீர்மேடு, பெரிய ஊரணம்பேடு ஆகிய கிராம பகுதிகளில் ராட்சத பைப்லைன் மூலம் கொட்டப்படுகிறது. இதனால் இப்பகுதி முழுவதும் நிலக்கரி சாம்பல் குவிந்துள்ளது.இந்நிலையில், கொசஸ்தலை ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் அத்திப்பட்டு புதுநகர் வழியாக கடலுக்கு செல்ல வழியில்லாமல், செப்பாக்கம் அருகே பக்கிங்ஹாம் கால்வாயில் கலக்கிறது. இதேபோல் பொன்னேரியில் இருந்து மீஞ்சூர், புதுப்பேடு, கே.ஆர்.பாளையம், பவுத்தம்பேடு வழியாக செப்பாக்கத்தில் ஆற்று தண்ணீர் கடலில் கலக்கிறது.இப்பகுதியில் தொடர்ந்து நிலக்கரி சாம்பல் கொட்டப்படுவதால், மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் அங்குள்ள கிராமப் பகுதிகளில் கழிவு சாம்பலுடன் மழை வெள்ளம் சூழ்ந்துவிடுகிறது. இதுதவிர, கோடை காலங்களில் இந்த கழிவு சாம்பல் காற்றில் வேகமாக பரவுவதால், அப்பகுதி மக்களுக்கு தலைவலி, காய்ச்சல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், இதேபோல் மீஞ்சூர் அருகே வடசென்னை அனல் மின்நிலையம் உள்ள செப்பாக்கம் பகுதியில் நிலக்கரி கழிவு சாம்பலால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை இன்று அதிகாலை 5.30 மணியளவில் நடிகர் கமல்ஹாசன் நேரில் பார்வையிட்டார். இதேபோல் கழிவு சாம்பல் கொட்டப்படும் பகுதியையும் பார்த்தார்.
பின்னர் அக்கிராம பெண்களிடம் கமல் விசாரித்தபோது, அவர்கள் அழுதபடியே ‘எங்கள் கிராமத்தை இதுவரை மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ., அரசு அதிகாரிகள் யாரும் வந்து பார்ப்பதில்லை. எங்கள் கிராமத்தை கழிவு சாம்பல் ஆக்கிரமித்துள்ளது.இதனால் நாங்கள் எந்த உணவை சாப்பிட்டாலும் செரிக்காமல், நாள்தோறும் ஒவ்வொரு வித நோய்க்கு ஆளாகி வருகிறோம். எங்கள் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் நிரந்தர வேலை இல்லாமல், அனல் மின்நிலையத்தில் தினக்கூலியாகவே வேலை செய்து குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். எங்களுக்கு இப்பிரச்னையில் இருந்து உரிய தீர்வு கிடைக்க நீங்களாவது உதவி செய்ய வேண்டும்’ என அப்ெபண்கள் அழுதபடி கூறினர்.அங்கு நடிகர் கமல் வந்திருப்பதை அறிந்ததும் மீஞ்சூர், அத்திப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராம இளைஞர்களும் மக்களும் ஓடிவந்து, அவரிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர் கமல் அங்கிருந்து காரில் திரும்பினார். நடிகர் கமல் கடந்த சில நாட்களாக தமிழக அரசுக்கு எதிராக அறிக்கை, பேட்டி கொடுத்து வருகிறார். தான் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளார். ஆனால் இதுவரை பொதுமக்களை சந்திக்காமல் இருந்து வந்தார். ஆனால் முதல் முறையாக தற்போதுதான் மக்கள் பிரச்னையை நேரில் சென்று பார்வையிட்டதோடு, கிராம மக்களையும் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.