சிபிஐ வழக்கில் சிக்கிய அமைச்சர் ராஜினாமா செய்ய தேவையில்லை: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
10/28/2017 2:44:11 PM
பெங்களூரு: மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து இருப்பதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடக முதல்-மந்திரி கூறினார்.கர்நாடகத்தில் கணபதி என்ற போலீஸ் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக அந்த மாநில மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மற்றும் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதனால் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியான பாஜ வலியுறுத்தி வருகிறது. அமைச்சர் பதவியை முதல்வர் பறிக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மூத்த மந்திரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து இருப்பதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பார் என்றும் கூறினார். பாஜ தனது அரசியல் ஆதாயத்துக்காக சி.பி.ஐ.யை பயன்படுத்துவதாகவும் அப்போது அவர் குற்றம் சாட்டினார்.