பிருந்தாவனம், பர்சனாவில் மது, இறைச்சி முட்டைக்கு தடை: யோகி அரசு திடீர் உத்தரவு
10/28/2017 2:41:53 PM
லக்னோ: உத்தரபிரதேசத்தில் பிருந்தாவனம் மற்றும் பர்சனாவில் முட்டை, இறைச்சி, மது விற்பனை செய்ய யோகி அரசு தடை விதித்து திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு வருகிற நவம்பர் 22ம் தேதி உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. அண்மைக்காலமாக உத்தரபிரதேசத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தல மான தாஜ்மகால் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
அண்மையில் யோகி அரசு வெளியிட்ட சுற்றுலா வழிகாட்டியில் தாஜ்மகால் இடம் பெறவில்லை என்ற சர்ச்சையும் எழுந்தது. இதற்கிடையில் பிருந்தாவனம், பர்சனா ஆகிய இரண்டு ஊர்களையும் புதிய சுற்றுலாத்தலங்களாக யோகி அரசு அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல், சுற்றுலா தலமாக அறிவித்த கையோடு அங்கு முட்டை, இறைச்சி, மது ஆகியவற்றின் விற்பனைக்கும் யோகி அரசு திடீர் தடை விதித்துள்ளது. தற்போது இந்த விவகாரம் உத்தரபிரதேசத்தில் மீண்டும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.