பாக். ராணுவத்தின் தொடர் அத்துமீறல் எதிரொலி: காஷ்மீர் எல்லையில் பதுங்கு குழிகள் கட்டுமான பணி தீவிரம்
10/27/2017 4:13:02 PM
புதுடெல்லி: இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் அத்துமீறல் காரணமாக காஷ்மீர் எல்லை பகுதிகளில் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பதுங்கு குழிகள் அமைக்கும் பணியை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.இந்திய பாகிஸ்தான் அமைதி ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்திவருகிறது. இந்த ஆண்டில் மட்டும் காஷ்மீர் எல்லையில் சுமார் 600 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பாகிஸ்தான் தாக்குதலில் காஷ்மீர் எல்லையில் உள்ள கிராம மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. தொடர்தாக்குதல் சமயத்தில் இந்திய ராணுவத்தினர் கிராம மக்களை பத்திரமான இடத்துக்கு அப்புறப்படுத்தி வருகின்றனர்.
சில கிராமங்களை ஒட்டி பதுங்கு குழிகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மக்கள் தற்காலிகமாக தங்கவைக்கப்படுகின்றனர். இந்நிலையில் மேலும் பல பதுங்கு குழிகள் அமைக்க திட்டமிடப்பட்டது. தொடர் தாக்குதல் எதிரொலியாக இந்த பணிகளை விரைந்து முடிக்க மத்திய மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக மாநில முதல்வர் மெகபூபா முப்தி நேற்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாடு கோடு பகுதியில் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் பதுங்குகுழிகள் விரைந்து அமைக்க முடிவு செய்யப்பட்டது.