அமைச்சர்கள் உள்பட 25 ஸ்லீப்பர்செல் எம்எல்ஏ விரைவில் கிளைமேக்ஸ் : தங்கதமிழ்செல்வன் பேட்டி
10/26/2017 4:19:06 PM
சேலம் : 25 ஸ்லீப்பர்செல் எம்எல்ஏக்கள் மூலம் விரைவில் கிளைமேக்ஸ் அரங்கேறும் என தங்கதமிழ்செல்வன் கூறினார். சேலம் தாதகாப்பட்டியில் அதிமுக அம்மா அணி சார்பில் 46ம் ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில், கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையம் நியாயமாக விசாரித்தால், எங்களுக்குதான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். இரட்டை இலை கிடைக்கவில்லை என்றால், உச்சநீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை. அமைச்சர் ஜெயக்குமார், தன் நிலைப்பாட்டை மறந்து பேசி வருகிறார். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கேட்கிறோம். காரணம் அவர், மருத்துவமனையில் இருந்தபோது, முதல்வர் பொறுப்பில் இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா தன்னை சுயநினைவோடு அழைத்து முதல்வர் பொறுப்பை ஏற்க சொன்னார் என கவர்னரிடம் ஓபிஎஸ் கூறியிருக்கிறார். அதனால், முதலில் ஓ.பன்னீர்செல்வத்தை தான் விசாரிக்க வேண்டும். அவருக்கு பதவி கிடைத்ததும், தர்மயுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது.
முதல்வர், துணை முதல்வர் இடையே போட்டி, பொறாமை தான் உள்ளது. அவர்கள் அணியில் பல பிரச்னைகள் இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றும் படத்தின் இடைவேளை முடிந்துவிட்டது. கிளைமேக்சை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அவர்கள் பக்கம் தற்போது உள்ளவர்களில் அமைச்சர்கள் உள்பட 25 எம்எல்ஏக்கள் ஸ்லீப்பர்செல்களாக இருக்கின்றனர். இது உண்மை. விரைவில் அவர்கள் மூலம் கிளைமேக்சை அரங்கேற்றுவோம். இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். நான் உள்பட 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில் 2ம் தேதி நல்ல தீர்ப்பு கிடைக்கும். எங்களுக்கு மீண்டும் பதவி கிடைக்கிறதோ இல்லையோ, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரின் பதவியும் பறிக்கப்படும் என நம்புகிறோம். இவ்வாறு தங்கதமிழ்செல்வன் கூறினார்.