பணமதிப்பிழப்பின் நோக்கம் காங்கிரசுக்கு புரியவில்லை : அருண் ஜெட்லி தாக்கு
10/26/2017 4:17:40 PM
புதுடெல்லி : பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் காங்கிரஸ் கட்சிக்கு புரியவில்லை என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சாடியுள்ளார். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ. 1000 மற்றும் ரூ. 500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை அடுத்த மாதம் 8ம் தேதியுடன் ஒரு ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த தினத்தை கருப்பு பண ஒழிப்பு தினமாக அனுசரிக்க பாஜ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கத்தை காங்கிரஸ் புரிந்து கொள்ளவில்லை என மத்திய நிதி அமைச்சர் அருண் ெஜட்லி கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
கருப்பு பணத்தை ஒழிக்க காங்கிரஸ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் போதிய புரிந்துணர்வு அவர்களுக்கு இல்லை. இதனால் தான் பாஜவின் முயற்சிகளை அவர்கள் விமர்சித்து வருகிறார்கள். கருப்பு பணத்துக்கு எதிராக எந்த துரும்பையும் கிள்ளி போடாதவர்கள், சட்டவிரோதமான பண புழக்கத்தை ஊக்குவித்து வருகிறார்கள். கருப்பு பணத்துக்கு வரி செலுத்தியபின் அதனை புழக்கத்தில் விடுவதே சட்டவிரோத பண பரிமாற்றம் என அவர்கள் நினைக்கிறார்கள். இது அவர்களின் அறியாமையை காட்டுகிறது. கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்கப்பட்டிருப்பதால் அவை தறபோது வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதற்கு முறையாக வரி வசூலிக்கப்பட்டபின்னர் சட்டப்படி புழக்கத்திற்கு வருகிறது. இவ்வாறு ஜெட்லி கூறினார்.