திருவள்ளூர் அருகே பரிதாபம் ரயிலில் பாய்ந்து 2 மகள்களுடன் தாய் தற்கொலை
10/26/2017 4:16:43 PM
திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன்(30). இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி சரஸ்வதி(25). இவர்களுக்கு நிலத்தியா(4), ஸ்ரீஜா(2) என்ற மகள்கள் உள்ளனர். லட்சுமணனுக்கும், சரஸ்வதிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலையில் தம்பதிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் அதிகரித்ததால் கோபத்தில் சாப்பாடு எதுவும் எடுத்து செல்லாமல் லட்சுமணன் வேலைக்கு சென்று விட்டார். சரஸ்வதி, மிகுந்த விரக்தியில் இருந்தார். இரு குழந்ைதகளும் அழுது கொண்டே இருந்தது.
‘எவ்வளவுதான் அனுசரித்து சென்றாலும் கணவர் அடிக்கடி தகராறு செய்கிறாரே, எப்படித்தான் வாழ்க்கையை நகர்த்த போகிறோமோ தெரியவில்லையே. இனிமேல் இந்த உலகத்தில் இருப்பதை விட உயிரை மாய்த்து கொள்வதே மேல். தான் மட்டும் இறந்தால் குழந்தைகள் நிலை என்னவாகும். அதனால் குழந்தைகளும் இந்த உலகத்தில் இருக்க கூடாது’ என்று நினைத்து தனது இரு குழந்தைகளையும் தூக்கி கொண்டு வேப்பம்பட்டு ரயில் நிலையத்துக்கு விறுவிறுவென நடந்து சென்றார். ரயில் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் சென்றபோது, சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. திடீரென தனது இரு குழந்தைகளுடன் தண்டவாளத்துக்கு வந்தார் சரஸ்வதி. வேகமாக வந்து கொண்டிருந்த ரயில், பயங்கரமாக மோதியது. இதில் சரஸ்வதி, நிலத்தியா, ஸ்ரீஜா ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். இந்த சம்பவத்தை பார்த்ததும் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். சிதறி கிடந்த உடல்களை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும், தகவல் அறிந்து செவ்வாப்பேட்டை போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் சரஸ்வதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெருமாள்பட்டுக்கு விரைந்தனர். போலீசார் வழக்கு பதிந்து, குடும்ப பிரச்னை காரணமாக 2 மகள்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்தில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.