அன்னிய செலாவணி மோசடி வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்
10/26/2017 4:09:44 PM
சென்னை : அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்காக டிடிவி.தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். கடந்த 1996ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள பர்க்லே வங்கி மூலம் டிப்பர் இன்வெஸ்மென்ட் என்ற நிறுவனத்திற்கு 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரத்து 331 அமெரிக்க டாலர் முதலீடு செய்தது தொடர்பாக டிடிவி.தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இவ்வழக்கின் குறுக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்கவும் மீண்டும் தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி தினகரன் மீது 2வது முறையாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி வழக்கின் முதல் சாட்சியான முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி கிஸ்தூர்சந்த் என்பவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
அவரிடம் தினகரன் தரப்பு வக்கீல் 28ம் தேதி முதல் 11ம் தேதி விசாரணையை நடத்தினர். வழக்கின் 2வது சாட்சி மணி, 3வது சாட்சி அத்திரி, 4வது சாட்சி பாலசுப்பிரமணியம், 5வது சாட்சி கங்காதரன், 6வது சாட்சி கோபால் என 7,8,9,10 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.
கடந்த 23ம் தேதி 11வது சாட்சி சீனிவாசன், 12வது சாட்சி மேத்தியூஸ் மேத்யூ ஆகியோரிடமும் குறுக்கு விசாரணை முடிக்கப்பட்டது. 12 பேரிடமும் குறுக்கு விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டிடிவி.தினகரனிடம் விசாரணை நடத்த இன்று நேரில் ஆஜராகும்படி அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இவ்வழக்கு இன்று மீண்டும் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் தினகரன் நேரில் ஆஜரானார். இவ்வழக்கை பிற்பகலுக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.