சென்னை மாநகரில் கவுன்சிலர்கள் இல்லாததால் மழைக்கால முன்எச்சரிக்கை எதுவும் நடக்கவில்லை : மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு
10/26/2017 4:05:48 PM
சென்னை : திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார். காலை 9.40 மணிக்கு கொளத்தூர் தொகுதியில் உள்ள வில்லிவாக்கம் ரயில்வே கேட் வந்தார். அப்போது, மழை பெய்தது. ஆனால், அதை பொருட்படுத்தாமல் மு.க.ஸ்டாலின் தனது தொகுதி நிதியில் இருந்து கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பால பணியை பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் வழங்கினார். பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறும் கேட்டு கொண்டார். பின்னர் வேகவதி தெரு சாலை சீரமைப்பு மற்றும் மழை நீர் கால்வாய் பணிகள் குறித்தும் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அதை தொடர்ந்து டி.கே.எம் காலனியில் உயர் அழுத்த மின் கம்பியை புதைவட கம்பியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
இதையடுத்து டிகேஎம் காலனியில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கப்பட்ட குடிநீர் தேக்க தொட்டி, கழிவறை ஆகியவற்றை தொடங்கி வைத்தார். ஜம்புலிங்கம் தெரு, பாபுராஜ் தெருவில் உள்ள உயர் அழுத்த மின் கம்பி புதைவட கம்பியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். டிகேஎம் காலனியில் மரக்கன்று நட்டார். பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நிலவேம்பு குடிநீர் வழங்கினார். வழிநெடுக அவர் நடந்தே சென்று தொகுதியில் உள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொளத்தூர் தொகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொண்டேன். டிகேஎம் காலனியில் மின் கம்பிகளை புதை வட கம்பிகளாக மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைத்தேன். அந்த பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றை பார்வையிட்டேன்.
பள்ளியில் குடிநீர் சுத்திரிகப்பு இயந்திரத்தை தொடங்கி வைத்தேன். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 1 ஆண்டாக நடத்தப்படவில்லை. அது பற்றி தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் திட்ட பணிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. பணிகள் நடக்காததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு கவுன்சிலர் உண்டு. அந்த வார்டின் தேவைகளை அறிந்து பணியாற்றுவார்கள். இப்போது கவுன்சிலர்கள் இல்லாததால் மழைக்கால முன்னெச்சரிக்கை எதுவும் நடக்கவில்லை. ஏற்கனவே கடுமையான மழை காரணமாக சென்னை நகரம் 2 முறை பாதிக்கப்பட்டுள்ளது. அதையறிந்து இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், எடுக்கவில்லை. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று தெரிந்த பின் ஆர்கே நகர் தேர்தலை நடத்துவது என்பது ஜனநாயக படுகொலை. இவ்வாறு அவர் கூறினார். அப்போது, எம்எல்ஏக்கள் சேகர்பாபு, ரங்கநாதன், பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி, நாகராஜ், முன்னாள் கவுன்சிலர் தேவ ஜவஹர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.