மே.வங்கத்திலிருந்து துணைராணுவம் வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வழக்கு
10/26/2017 4:04:08 PM
புதுடெல்லி : மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மலை மாவட்டத்தை தனிமாநிலமாக அறிவிக்கக்கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
100 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற பந்த் போராட்டம் அண்மையில் வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு துணை ராணுவத்தை அனுப்பியிருந்தது. ஓரளவு அமைதி திரும்பிய நிலையில் சுமார் 1000 வீரர்களை திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவரது எதிர்ப்பை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் பொருட்படுத்தவில்லை. இதை ெதாடர்ந்து மாநில அரசு சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய படைகள் வாபஸ் பெற கடந்த 17ம் தேதி கொல்கத்தா ஐகோர்ட் தடை விதித்தது. இந்த தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை நாளை விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் செலமேஸ்வர், அப்துல் நாசிர் தெரிவித்துள்ளனர்.