ஊதிய உயர்வு கோரி காட்டாங்கொளத்தூரில் 3வது நாள் போராட்டம் தனியார் மருத்துவமனை நர்ஸ்கள் கைகளை பிடித்து இழுத்து தனி அறையில் சரமாரி தாக்கு
10/13/2017 3:35:00 PM
செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நர்ஸ்கள் இன்று 3வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நர்ஸ்களை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு அடுத்த காட்டாங்கொளத்தூரில் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு பணியாற்றும், 500க்கும் மேற்பட்ட நர்சுகளுக்கு, உச்சநீதிமன்ற தீர்ப்புபடி ஊதிய உயர்வை வழங்கவில்லை. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்புபடி சம்பளம் வழங்க கோரி மருத்துவமனையின் நுழைவாயில் முன் அமர்ந்து நேற்று முன்தினம் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மறைமலைநகர் போலீசார், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படவில்லை. நேற்று 2வது நாளாக மருத்துவமனை முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து நர்சுகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 3வது நாளாக இன்று மருத்துவமனை முன்பு நர்ஸ்களின் போராட்டம் தொடர்ந்தது. மருத்துவமனை டீன் சுந்தரம், மருத்துவமனை கண்காணிப்பாளர் சுவாமிநாதன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘மற்ற பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் ஊதியம் வழங்கப்படும். உடனடியாக பணிக்கு திரும்புங்கள்’ என்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாதிபேர் பணிக்கு செல்ல ஒப்பு கொண்டனர். ஆனால் பாதி நர்ஸ்கள் எதிர்ப்பு தெரிவித்து, ‘ஒவ்வொரு முறையும் இப்படிதான் சொல்கிறீர்கள், முதலில் சம்பளத்தை கொடுங்கள், அதற்கு பிறகு வேலைக்கு செல்கிறோம்’ என்றனர்.
அந்த நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டிகள், நித்யா என்ற நர்சின் கையை பிடித்து இழுத்து தனி அறையில் சரமாரியாக தாக்கினர். இதை தட்டி கேட்ட நவீன் என்ற நர்சையும் தாக்கினர். இதனால் அனைத்து நர்சுகளும் ஆவேசம் அடைந்தனர். ஏற்கனவே பணிக்கு செல்வதாக கூறிய நர்ஸ்கள் உள்பட அனைவரும் மருத்துவமனை நுழைவாயில் முன்பு திரண்டு நிர்வாகத்துக்கு எதிராகவும், செக்யூரிட்டிகளை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வண்டலூர் டிஎஸ்பி அண்ணாதுைர, மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நர்ஸ்கள் கூறுகையில், ‘எங்கள் கூட்டமைப்பின் வழிகாட்டுதல்படி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நியாயமாக போராடும் எங்களை நிர்வாகம் மிரட்டுகிறது. செக்யூரிட்டிகளை வைத்து அடித்து உதைக்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். ஊதிய உயர்வு மற்றும் செக்யூரிட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்’ என்றனர். இதற்கிடையில் இங்கு பணியாறும் நர்ஸ்களில் பலர் வெளியூரை சேர்ந்தவர்கள். அவர்கள் மருத்துவமனை விடுதியில் தங்கியுள்ளனர். நேற்று நள்ளிரவு 11 மணியளவில் பெண்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற செக்யூரிட்டிகள், ‘போராட்டம் நடத்தினால் விடுதியை பூட்டி விட்டு உங்களது உடமைகளை தூக்கி வெளியே வீசி விடுவோம்’ என்று மிரட்டியுள்ளனர். அதேபோன்று ஆண் நர்ஸ்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற செக்யூரிட்டிகள், ‘நீங்களும் போராட்டம் செய்ய கூடாது, அப்படி போராடினால் வெளியே விரட்டி விடுவோம்’ என்று மிரட்டி விட்டு விடுதி அறையில் நோட்டீஸ் ஒட்டினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.