துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி பதவிகளுக்கான குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது: 85 பதவிக்கு 4199 பேர் போட்டி
10/13/2017 3:34:23 PM
சென்னை: துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் பதவியில் உள்ள 85 பணியிடங்களுக்கான மெயின் தேர்வு இன்று தொடங்கியது. தேர்வு கூடத்துக்கு செல்போன், விலை உயர்ந்த பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பணியில் அடங்கிய துணை கலெக்டர் -29 காலிப்பணியிடம், போலீஸ் டிஎஸ்பி- 34, வணிகவரித்துறை உதவி ஆணையர் -8, மாவட்ட பதிவாளர்-1, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்- 5, தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகளில் அடங்கிய மாவட்ட அலுவலர்-8 உள்ளிட்ட 85 காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி வெளியிட்டது. இதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடந்தது. இத்தேர்வில் 1,37,855 பேர் கலந்து கொண்டனர். இதில் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு(மெயின் தேர்வு) 4199 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு நாளை, நாளை மறுநாள் என 3 நாட்கள் நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இந்த தேர்வு நடந்தது. சென்னையில் எழும்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட தமிழகம் முழுவதும் 42 இடங்களில் இந்த தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தான் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வு எழுதுபவர்கள் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வர தொடங்கினர். மேலும் தேர்வு மையங்களுக்கு கைபேசி, மின்னணுச் சாதனங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தேர்வு மையங்களில் திடீர் சோதனையும் நடத்தினர்.