ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது: விஜயகாந்த் பரபரப்பு பேட்டி
10/13/2017 3:28:48 PM
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தினமும் உயிர் பலி என்பது தொடர் கதையாகி வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் உடல் நலம் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் விஜயகாந்த் அளித்த பேட்டி: தமிழகத்தில் டெங்குவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குப்பைகளை அகற்றினாலே இந்த பிரச்னையை தீர்த்திருக்கலாம். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர்களோ, கட்சி தலைவர்களோ பார்க்க வரும் போது தான் அரசு மருத்துவமனைகளை சுத்தப்படுத்துகிறார்கள். மருத்துவமனையை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது நல்லது. தமிழக அரசு நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து பணம் சம்பாதிக்க தான் பார்க்கிறது. மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கவில்லை.
டெங்கு பாதிப்பை பார்வையிட வரும் மத்தியக்குழுவால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. தமிழக அரசுக்கு டெங்கு நோயை கட்டுப்படுத்துவதை விட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்துவதுதான் முக்கியமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் டெங்கு ஒழியும். சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் தேமுதிக போட்டியிடாது. அரசு துரித நடவடிக்கை எடுத்தால் தான் டெங்குவை ஒழிக்க முடியும். எல்லா இடங்களிலும் நிலவேம்பு கசாயம் வழங்கிட வேண்டும். தமிழகத்தில் டெங்கு பரவிய போது முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் அவர்களின் பிரச்னையை தீர்க்கவே நேரம் சரியாக போகிறது. அதிமுக அரசு மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுகளை வாங்க தான் நினைக்கிறது. மக்கள் பிரச்னையை தீர்த்து வைத்து ஓட்டுக்களை பெறலாம் என்று நினைக்கவில்லை. சுகாதாரத்துறை எல்லா இடங்களிலும் சுத்தம் செய்து நடவடிக்கை மேற்கொண்டால் பெருமளவில் டெங்குவை ஒழிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.