தமிழகத்தில் டெங்கு பாதிப்பு மத்திய குழு சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை: அரசு மருத்துவமனைகளில் ஆய்வு
10/13/2017 3:27:52 PM
சென்னை: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட மத்திய மருத்துவ குழுவினர் நேற்று நள்ளிரவு தமிழகம் வந்தனர். இன்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, அரசு மருத்துவமனைகளில் ஆய்வு பணிகளை தொடங்கினர். தமிழத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, சேலம், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் கோரதாண்டவமாடுகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 200க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோய்க்கு சிகிச்சை பெற்றும், சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துள்ளனர். தமிழகத்தில் தினமும் 10க்கும் ேமற்பட்டவர்கள் உயிரிழக்கின்றனர். இதனால் மக்களிடையே பீதி, அச்சம் ஏற்பட்டுள்ளது. லேசான காய்ச்சல் என்றாலே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். தமிழக அரசும் டெங்கு நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தினசரி அறிவித்து வருகிறது. டெங்கு எதனால் வருகின்றது என்பது பற்றி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நடவடிக்கை, சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் வீடு வீடாக துண்டு பிரசுரமும் வழங்கி வருகிறது. மேலும், டெங்கு கொசுவை உற்பத்தி செய்யும் வகையில் கடைகள் முன் டயர் உள்ளிட்ட தேவையில்லா கழிவுகளை தேக்கி வைப்பது, மழை நீர் தேங்கி இருந்தால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் பல லட்சம் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளித்துள்ளனர். சென்னை உள்ளிட்ட சில இடங்களில் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று டெல்லி சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு நோய் குறித்து விளக்கியதுடன், மத்திய சுகாதாரத்துறை மூலம் சிறப்பு குழுவை தமிழகத்துக்கு அனுப்பி டெங்குவை ஒழிக்க உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்ற பிரதமர், உடனடியாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை நேற்று இரவு தமிழகத்துக்கு அனுப்பி வைத்தார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்பு குறித்து நேரடியாக ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் நேற்று நள்ளிரவு 12.40 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். இந்த குழுவில் பூச்சினால் பரவும் நோய் கட்டுப்பாட்டு மைய இணை இயக்குனர் கல்பனா பர்வா, துணை இயக்குனர் வினைகர்க், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் அசுதோஸ் பிஸ்வாஸ், குழந்தைகள் நல மருத்துவர் சுவாதி துப்லிஸ், பூச்சினால் பரவும் நோய் கட்டுப்பாட்டு மைய மருத்துவர் கவுசல் குமார் ஆகியோர் வந்துள்ளனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழக மருத்துவ துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். நேற்று சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கினர். பின்னர் இன்று காலை மத்திய குழுவினர் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகம் சென்றனர்.
அங்கு அவர்கள், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் சென்னையில் அனைத்து அரசு மருத்துவமனை டீன் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய குழுவினர், தமிழகத்தில் டெங்கு நோய் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, தமிழகத்தில் டெங்குவால் மொத்தம் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் என்ன, எத்தனை பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் என்ன, எதிர்கால திட்டங்கள் என்ன உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தமிழக அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் கேட்டறிந்தனனர். தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை குறித்து அறிக்கையாக மத்திய குழுவிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கினர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு மத்திய குழுவினர், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை ஆகிய இடங்களில் முதல்கட்டமாக ஆய்வு நடத்தினர். அதன்படி, இன்று பிற்பகல் சென்னையில் சில தனியார் மருத்துவமனைகளையும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு தனித்தனியாக சென்றும் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
டெங்கு தடுக்க நடவடிக்கை
மத்திய குழுவில் இடம் பெற்றுள்ள இணை இயக்குனர் கல்பனா பர்வா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்பு, டெங்கு அதிகளவில் பரவுவதற்கான காரணம், தடுத்து நிறுத்த என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கும்படி மத்திய அரசு எங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இங்கு வந்துள்ளோம். நாளை (இன்று) காலை சென்னையில் ஆலோசனை நடத்துகிறோம். அந்த கூட்டத்தில் தமிழக அரசு உயரதிகாரிகள், மருத்துவ துறை உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில், தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் அதிகளவில் டெங்கு பாதிப்பு உள்ளது, எந்தெந்த மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகள் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர், எத்தனை நாட்கள் தங்கியிருந்து இந்த ஆய்வு பணியை மேற்கொள்ள இருக்கிறோம், எந்தெந்த பகுதிகளில் ஆய்வு நடத்துவோம், இதுவரையில் உயிரிழப்புகள் நடந்துள்ளதா? அப்படி நடந்திருந்தால் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்படும். அதன்பின்பு பல்வேறு இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வோம். இதைத் தொடர்ந்து முழு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பிப்போம்.