‘சபாநாயகரை மிரட்டும் வகையில் பேசுகிறார்’ டிடிவி தினகரன் மீது போலீசில் புகார்
10/12/2025 3:19:04 PM
அரக்கோணம்: அரக்கோணம் நகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பாண்டுரங்கன், ஒன்றிய அதிமுக நிர்வாகி ஏ.எல்.நாகராஜன் ஆகியோர் தனித்தனியாக அரக்கோணம் டவுன் ேபாலீசில் நேற்று புகார் கொடுத்துள்ளனர். அதில் சபாநாயகரை மிரட்டும் வகையில் பேசி வரும் டிடிவி. தினகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இப்புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம் முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனி, வளர்புரம் ஊராட்சி செயலாளர் முத்தப்பன், சோகனூர் கிளை செயலாளர் பரந்தாமன் ஆகியோரும் அரக்கோணம் தாலுகா காவல்நிலையத்தில் டிடிவி. தினகரன் மீது தனித்தனியாக புகார் அளித்துள்ளனர்.
அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி கூறுகையில், தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் நடுநிலையோடு பணிகளை செய்து வருகிறார். 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததது தொடர்பாக டிடிவி தினகரன் சபாநாயகரை மிரட்டும் வகையில் பல்வேறு கருத்துகளை பேசி வருகிறார். இனிமேல் இதுபோன்று பேசுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். சபாநாயகருக்கு அரசு கூடுதல் பாதுகாப்பு வழங்கவேண்டும். டிடிவி தினகரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.