கவர்னருடன் திடீர் சந்திப்பு; தேமுதிக தனித்து போட்டியிடும் : விஜயகாந்த் பரபரப்பு பேட்டி
10/7/2025 2:45:51 PM
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது என்றும், தேமுதிக தனித்து போட்டியிடும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழகத்தின் 25வது கவர்னராக பன்வாரிலால் புரோகித் நேற்று பதவி ஏற்று கொண்டார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை சென்னை கிண்டி ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். அப்போது, அவர் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
சந்திப்பின் போது துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ் உடன் இருந்தார். இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்தது. சந்திப்புக்கு பின்னர் விஜயகாந்த் அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து எழுத்து பூர்வமாக கவர்னரிடம் கடிதம் கொடுத்தோம். புதிய கவர்னர் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மோசமாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் நடித்து கொண்டிருக்கிறார்கள். அரசு முழித்திருக்கிறதா? தூங்கிக் கொண்டிருக்கிறதா? என்று தெரியவில்லை. மழைக்காலத்தில் வெள்ளத்தை எதிர்கொள்ள அரசு தயாராக இல்லை. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.
வருகிற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக யாருடனும் கூட்டணி அமைக்காது. தனித்து போட்டியிடும். உங்களுக்கு ஒரு கும்பிடு உங்கள் கூட்டணிக்கு ஒரு கும்பிடு. எம்ஜிஆர் எனக்கு பிடித்த நடிகர். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மாணவர்களை அழைத்து செல்வது கண்டிக்கத்தக்கது. சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் எனக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை. அதனால் மணி மண்டபம் திறப்பு விழாவில் நான் பங்கேற்கவில்லை. ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் வரட்டும். அரசியலுக்கு வந்து விட்ட என்னை பற்றி ரஜினி, கமலிடம் கேளுங்கள்.