மோடி பிரதமராக ஆதரவு தெரிவித்தது நான் செய்த மிகப்பெரிய தவறு அருண் ஷோரி தாக்கு
10/7/2025 2:44:05 PM
புதுடெல்லி: மோடியை பிரதமராக்க வேண்டும் என நான் ஆதரவு தெரிவித்தது மிகப் பெரிய தவறு என அருண் ஷோரி தாக்கியுள்ளார். இமாச்சல பிரதேசத்தில் உள்ள கசவுலியில் குஷ்வந்த் சிங் இலக்கிய விழா நடைபெற்றது. இதில் பாஜ மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஷோரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், மோடியை பிரதமராக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் நான் மிகப் பெரிய தவறு செய்து விட்டேன். வி.பி.சிங்குக்கு ஆதரவு தெரிவித்த பிறகு நான் செய்த மிகப் பெரிய இரண்டாவது தவறு இதுவாகும்.
ஆட்சியாளர்கள் எதை செய்தாலும் அதை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன. ஆட்சியாளர்கள் தற்போது என்ன பேசுகிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டியதில்லை. கடந்த காலத்தில் இவர்கள் என்ன சொன்னார்கள் என்பதுதான் முக்கியம். அவர்கள் அப்போது என்ன சொன்னார்கள், தற்போது என்ன செய்தார்கள் என்பதை கொண்டுதான் எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டும். குஜராத் மாடல் போன்றவை தோல்வி அடைந்து விட்டன. அதை ஊடகங்கள் முறையாக ஆய்வு செய்ய தவறிவிட்டன.
அதனால் தற்போது இதை நாம் உணர்கிறோம். குஜராத் மாடல் ஒரு போதும் முதன்மையான ஒன்றாக இருக்க முடியாது. குஜராத்தில் நடைபெற்ற 9 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 10 லட்சம் கோடி, 15 லட்சம் கோடி முதலீடு செய்வோம் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் இறுதியில் நடந்தது என்ன வெறும் 6 சதவீதம் கூட வரவில்லை. வேலை வாய்ப்பிலும் அரசு தோல்வி அடைந்து விட்டது. ஜனவரி தொடங்கி ஏப்ரல் வரையிலான கால கட்டத்தில் 15 லட்சம் பேர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். ஆனால் இவர்கள் என்ன சொன்னார்கள். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்போம் என்றனர். ஆனால் அப்படியான ஒன்றை எங்கும் நம்மால் காண முடியவில்லை என்றார்.