ஐஆர்சிடிசியில் ஆதார், செல்போன் இணைத்தால் கூடுதலாக 6 முறை டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: ரயில்வே அதிரடி சலுகை
10/6/2025 2:47:08 PM
புதுடெல்லி: ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஆதார் மற்றும் செல்போன் ஆகியவற்றை இணைத்தால் கூடுதலாக 6 முறை டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே அறிவித்துள்ளது. ரயிலில் முன்பதிவு செய்வதற்கு ஆன்லைன் மூலமாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் ஐஆர்சிடிசி இணையதளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மொபைல் போன் மூலம் பதிவு செய்வதற்கு இதற்கென தனியாக செயலியும் உள்ளது. இந்த சூழலில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஒரு மாதத்திற்கு 6 முறை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. தற்போது அதில் புதிய முறையை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இதன்படி ஐஆர்சிடிசி இணையதளத்தில் தங்களது மொபைல் போன் மற்றும் ஆதார் ஆகியவற்றை இணைத்தால் இனி, மாதத்திற்கு 6 முறைக்கு பதிலாக 12 முறை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள முடியும். முன்பதிவு பட்டியலில் பயணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் ஆதார் எண் குறிப்பிட்டிருக்க வேண்டும். இதை செய்பவர்களுக்கு மாதத்திற்கு 12 முறையும், ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் ஒரு மாதத்திற்கு 6 முறை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.