பாகிஸ்தான் தீவிரவாதிகள் 100 பேரை கொல்ல வேண்டும் : பிஎஸ்எப் வீரரின் மகள் ஆவேசம்
10/5/2025 3:44:59 PM
பாகல்பூர்: பீகாரை சேர்ந்தவர் பிரிஜ் கிஷோர் யாதவ். இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர். நேற்று முன் தினம் காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் கிஷோர் பலியானார். இவரது உடல் நேற்று அவரது சொந்த ஊரான பீகார் மாநிலம் பாகல் பூர் மாவட்டத்திலுள்ள கமல்ஷாக் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது உறவினர்கள், எல்லைப் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள், கிஷோருக்கு இறுதி மரியாதை செலுத்த வந்திருந்தனர்.
அப்போது கிஷோரின் மகள் சுஷ்மா குமாரி, “என் தந்தை நாட்டுக்காக உயிரை கொடுத்துள்ளார். அவரின் தியாகத்தை போற்ற வேண்டும் என்றால் 100 பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தலைகளை எடுக்க வேண்டும்” என கூறி கதறினார். எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும், கிஷோரின் நண்பர்களும் சுஷ்மா குமாரிக்கு ஆறுதல் கூறி சாந்தப்படுத்தினர். கிஷோரின் குடும்பத்திற்கு பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் ரூ. 11 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.