சமாஜ்வாதி தலைவராகிறார் அகிலேஷ் யாதவ்
10/5/2025 3:36:29 PM
ஆக்ரா: சமாஜ்வாதி கட்சியின் தலைவராக மீண்டும் அகிலேஷ் யாதவ் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இன்று நடைபெறும் கட்சியின் தேசிய பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து முறையாக அறிவிக்கின்றனர். சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் கடந்த முறை உத்தரபிரதேச முதல்வராக இருந்தார். இந்நிலையில், முலாயமிற்கும் அகிலேஷுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. தனது சகோதரர் சிவபால் யாதவை, அகிலேஷ் ஓரங்கட்டியதை முலாயம் எதிர்த்தார். இதனால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு முற்றியது. இந்த சமயத்தில் உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் வந்தது. அப்போது கட்சியில் பிளவு ஏற்பட்ட நிலையில், கட்சியின் தலைவராக அகிலேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு அதிகம் இருந்ததால், அகிலேஷுக்கு அங்கீகாரம், கட்சியின் சின்னம் கிடைத்தது.
இந்த தேர்தலில் பாஜ அமோக வெற்றிபெற்று யோகி ஆதித்யநாத் முதல்வரானார். சமாஜ்வாதி படுதோல்வியை சந்தித்தது. தன்னுடைய பேச்சை கேட்காமல் அகிலேஷ் தன்னிச்சையாக நடந்ததால்தான் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதாக முலாயம் குற்றம்சாட்டினார். தேர்தல் தோல்விக்கு பின் தந்தை, மகன் இடையே சுமூக உறவு இல்லை. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவராக மீண்டும் அகிலேஷ் தேர்வு செய்யப்படுகிறார். இன்று நடைபெறும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இதுபற்றி முறையாக அறிவிக்கப்படவுள்ளது. 2019ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல், 2022ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், கட்சியை பலப்படுத்தும் வகையிலும் அகிலேஷ் தேர்வு செய்யப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அகிலேஷுக்கு, அவரது தந்தை முலாயம் சிங், சித்தப்பா சிவபால் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.