5வது புரோ கபடி லீக் : தமிழ்தலைவாஸ் தொடர்ந்து 4வது தோல்வி
10/4/2025 4:09:51 PM
சென்னை: 5வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தலா 22 லீக் போட்டியில் விளையாடும். லீக் சுற்று முடிவில் 2 பிரிவிலும் முதல் 3 இடம் பிடிக்கும் அணி பிளே-ஆப் சுற்றுக்கு நுழையும். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று இரவு நடந்த 107வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் -தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் தடுமாறியது. முதல் பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் 30 -15 என வலுவான முன்னிலை பெற்றது. 2வது பாதியிலும் தமிழ்தலைவாஸ் வீரர்களை திணறடித்த தெலுங்கு டை்டன்ஸ் 58-37 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றது.
தமிழ்தலைவாஸ் அணியின் தடுப்பாட்டம் படுமோசமாக இருந்தது. முதல் பாதியில் எதிரணி வீரர் ஒருவரை கூட பிடிக்க முடியவில்லை. கேப்டன் அஜய்தாகூர் ரெய்டு மூலம் மட்டும் 20 புள்ளிகளை சேர்த்தார். சென்னையில் தொடர்ந்து 4வது போட்டியில் தமிழ் தலைவாஸ் தோல்வி அடைந்துள்ளது. தனது 17வது லீக்கில் விளையாடிய தமிழ் தலைவாசுக்கு இது 11வது தோல்வி. பி பிரிவில் 34 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. இதனால் பிளேஆப் சுற்று வாய்ப்பு மங்கியது. நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் குஜராத் 42-22 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தியது. சென்னையில் இன்று இரவு 8 மணிக்கு மும்பை-அரியானா ஸ்டீலர்ஸ் , 9 மணிக்கு தமிழ் தலைவாஸ்-உத்தரபிரதேச யோத்தா அணிகள் மோதுகின்றன.