காவிரி மகா புஷ்கரம் விழா கோலாகலம் மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஏற்பாடுகள் தீவிரம்
9/18/2017 3:56:49 PM
மயிலாடுதுறை : காவிரி மகாபுஷ்கரம் விழா நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாகட்டத்தில் கடந்த 12ம் தேதி துவங்கியது. விழா 24ம் தேதி வரை நடைபெறுகிறது. விடுமுறை நாளான நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் துலாகட்டத்தில் புனித நீராடினர். துலாக்கட்டத்தில் அமைக்கப்பட்ட நிரந்தர நீர்த்தேக்க தொட்டியில் இருக்கும் 12 கிணறுகள் 12 ராசிகளை குறிப்பதாகவும், அவை 12 நதிகளுக்கான புஷ்கரணி என்ற நம்பிக்கையில் 12 கிணற்றிலிருந்தும் நீரை எடுத்து தலையில் தெளித்து இரவு பகல் பாராமல் பக்தர்கள் புனிதநீராடி வருகின்றனர். விழாவின் 7ம் நாளான இன்று காலை 6 மணிக்கு கோபூஜையும், 8 மணிக்கு சந்திரமவுலீஸ்வர பூஜையும் நடந்தது. மயிலாடுதுறையில் காவிரி மகாபுஷ்கரத்தையொட்டி வரும் 20ம் தேதி மகாளய அமாவாசை அனுசரிக்கப்படுகிறது என்பதால் மயிலாடுதுறையில் பக்தர்கள் 19ம் தேதியே குவிய உள்ளனர். 20ம் தேதி அன்று திருப்பதி ஜீயர் செங்கோல் ஆதீன குருமகா சன்னிதானம் தலைமையில் மகாளய அமாவாசை விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடக்கின்றன. நாகை மாவட்டத்திற்கு அன்று உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
மகாளய அமாவாசையன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் துலாகட்டத்தில் புனித நீராடுவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. 19ம் தேதி மாலை தொடங்கும் மகாளய அமாவாசை 20ம் தேதி காலை 11.22வரை உள்ளதால் 20ம் தேதி அதிகாலை முதலே பக்தர்கள் துலாகட்டத்தில் புனித நீராடுவர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 20ம் தேதிகாவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடுகிறார். பல அமைச்சர்களும் உடன் வருகின்றனர். முதல்வர் வருகையையொட்டி திருச்சி போலீஸ் சரகத்திலிருந்து ஐ.ஜி. வரதராஜூலு தலைமையில் டிஎஸ்பிக்கள், எஸ்பிக்கள் உள்பட 2 ஆயிரம் போலீசார் மயிலாடுதுறைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.ரங்கம் : காவிரி மகா புஷ்கரம் விழா 7ம் நாளான இன்று, ரங்கம் அம்மாமண்டபம் காவிரியாற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.