இரட்டை இலை சின்னத்தை மீட்க ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவு தலைவர்கள் டெல்லி பயணம்
9/18/2017 3:50:00 PM
சென்னை : இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளிக்கின்றனர். அதிமுக எடப்பாடி, ஓ.பி.எஸ் அணி என செயல்பட்ட போது இரண்டு அணியினரும் இரட்டை இலை சின்னத்தை பெற முற்பட்டனர். இதனால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சியின் பெயரை முடக்கி வைத்தது. எடப்பாடி அணிக்கு அதிமுக(அம்மா), ஓ.பி.எஸ். அணிக்கு(புரட்சி தலைவி அம்மா) என்று பெயர் ஒதுக்கப்பட்டது. இருந்த போதிலும் இரண்டு அணிகளும் இரட்டை இலை சின்னத்தை பெற லட்சக்கணக்கில் போட்டி போட்டு ஆவணங்களை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இரண்டு அணிகளும் கடந்த மாதம் 21ம் தேதி இணைந்தன. அணிகள் இணைந்ததை தொடர்ந்து இரட்ைட இலை சின்னத்தை மீட்கும் முயற்சியில் தற்ேபாது ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கடந்த 12ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. அதில் அதிமுக பொது செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொது செயலாளராக ஜெயலலிதா இருந்த இடத்தில் யாரும் இனி நியமிக்கப்பட மாட்டார்கள். கட்சியை ஒருங்கிணைப்பு குழு வழிநடத்தும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையரை சந்திப்பதற்காக அமைச்சர் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று காலை 10.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். காலையில் தம்பித்துரை டெல்லி புறப்பட்டு சென்றார். இவர்கள் அனைவரும் இணைந்து இன்று பிற்பகலில் தேர்தல் ஆணையரை சந்திக்கின்றனர். அப்போது இரண்டு அணிகளும் இணைந்ததற்காக ஆவணங்களை தாக்கல் செய்கின்றனர். மேலும் இரண்டு அணிகளும் தனித்தனியாக இரட்டை இலை சின்னத்தை மீட்க கொடுத்த ஆவணங்களையும், பொது செயலாளர் சசிகலா தான் என்பதற்காக கொடுத்த ஆவணங்களையும் திரும்ப பெறுகின்றனர். மேலும் பொது செயலாளராக சசிகலா நியமனம் ரத்து செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட அதிமுக பொதுக்குழு தீர்மானத்தையும் அவர்கள் அளிக்க உள்ளனர்.
தேர்தல் ஆணையம் ஆதாரங்களை ஆய்வு செய்து அதன் பிறகு இரட்ைட இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து முடிவு செய்யும். எடப்பாடி, ஓ.பி.எஸ். அணியினர் தேர்தல் ஆணையரை சந்திப்பது டி.டி.வி.தினகரன் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைத்த பின்னரே உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. சென்னை விமானநிலையத்தில் நிருபர்களிடம் பேசிய ஜெயக்குமார், ‘‘தாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம். இப்போது முழுக்க முழுக்க அரசு முறை பயணமாகவே செல்கிறேன். அது எதற்காக என்று சொல்ல முடியாது. டிடிவி தினகரன் கூறுவதற்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது’’ என்றார்.