சென்னை, காஞ்சிபுரத்தில் நள்ளிரவு சூறைக்காற்றுடன் மழை தமிழகத்தில் இன்று மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
9/17/2017 2:46:51 PM
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக தமிழகத்திலும் குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு மாவட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடந்தாண்டை காட்டிலும் தென்மேற்கு பருவமழை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சராசரி அளவை காட்டிலும் கூடுதலாக பெய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த மழை காரணமாக தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகள் மற்றும் ஏரிகள் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நிலவி வந்த குடிநீர் பிரச்சனைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே, தெரிவித்திருந்தது. அதன்படி நேற்றும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னை நுங்கம்பாக்கம் 9.5 மி.மீ, சென்னை விமான நிலையம் 15 மி.மீ, கோவை 18.5 மி.மீ, கன்னியாகுமரி 15.8 மி.மீ, தஞ்சாவூர் 15.6 மி.மீ, திருத்தணி 10.4 மி.மீ, ஊட்டி 21.2மி.மீ,வால்பாறை 88 மி.மீ, வேலூர் 27 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு சாலையில் நடக்க முடியாத அளவுக்கு சூறைகாற்று வீசியதை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக, மெரினா, பட்டினப்பாக்கம், சாந்தோம், நுங்கம்பாக்கம், பெரம்பூர், வியாசர்பாடி, துரைப்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, திருவொற்றியூர், வடசென்னையில் பல்வேறு இடங்கள் என பல இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல பகுதிகள் இருளில் மூழ்கியதாலும், தொடர்ந்து கனமழை பெய்ததாலும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதே போன்று ெசன்னை புறநகர் பகுதியான தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி, மாமல்லபுரம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:தென்மேற்கு பருவமழை கேரளா, ராயலசீமா மற்றும் கடலோர கர்நாடகா ஆகிய பகுதிகளில் தீவிரமடைந்து இருக்கிறது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.