சாரண சாரணியர் தலைவர் தேர்தல் தொடங்கியது எச்.ராஜா வெற்றிபெறுவாரா?: ஆதரவாளர்கள் மோதல்: சென்னையில் பரபரப்பு
9/16/2017 3:04:08 PM
சென்னை: சாரணர் சாரணியர் இயக்கத் தேர்தல் இன்று காலை சென்னையில் தொடங்கியது. தேர்தலை நிறுத்தும்படி தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜாவின் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தலை நிறுத்த மறுத்த அதிகாரிகள் மாலையில் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
தமிழ்நாடு சாரணர் சாரணியர் இயக்க தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு நடந்தது. அதன்பிறகு கடந்த 2013ல் இந்த தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த மார்ச் 18ல் சாரணர் அமைப்பின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் செப்டம்பர் 16ம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று சாரணர், சாரணியர் இயக்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில், தலைவர் பதவியில் பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் பள்ளி கல்வித்துறை இயக்குனர் மணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். துணை தலைவர் பதவியில் ஆண்கள் பிரிவில் 3 பேர், முதன்மை ஆணையர் உள்ளிட்ட ஒரு சில பதவிகளுக்கும் நிர்வாகிகள் போட்டியிடுகின்றனர். சாரணர், சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கு எச்.ராஜா போட்டியிடுவதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மாணவர்கள் மத்தியில் மதவாத்தை திணிக்கும் முயற்சியில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திக தலைவர் வீரமணி ஆகியோர் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையில் தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. இந்த தேர்தல் பார்வையாளராக சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் அலுவலராக கலாவதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது மேற்பார்வையில் தான் இந்த தேர்தல் தொடங்கியது. இதில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சாரணர், சாரணியர் இயக்க உறுப்பினர்கள் 499 பேர் வாக்களிக்க ஆர்வத்துடன் வந்தனர். இந்த நிலையில் காலை 10.30 மணியளவில் எச்.ராஜா தரப்ைப சேர்ந்த ரமேஷ் என்பவர் வாக்கு பதிவு நடக்கும் இடத்திற்கு வந்தார். அவர், தேர்தல் நடத்தும் அதிகாரி கலாவதியிடம் சாரண, சாரணியர் மத்திய தலைமை அலுவலகத்தில் இருந்து தேர்தலை நிறுத்தி வைக்க கோரி கடிதம் வந்ததாக கூறியுள்ளனர். எனவே, தேர்தலை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு ெதரிவித்துள்ளார். ஆனால், தேர்தல் அதிகாரி கலாவதி எங்களுக்கு இது குறித்து எந்த தகவலும் வரவில்லை. எனவே, தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் தேர்தல் நிறுத்தி வைக்க முடியாது என்று கூறினார். இதனால், எச்.ராஜா தரப்புக்கும், தேர்தல் அதிகாரி கலாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால் சில நிமிடங்கள் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், எச்.ராஜா தரப்பை சேர்ந்தவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர். அதன்பின்னர் மீண்டும் தேர்தல் நடந்தது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து எச்.ராஜா தரப்பு கூறும் போது, வாக்கு பதிவில் முறைகேடு நடப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில் நாங்கள் மத்திய தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தோம். அந்த புகாரின் பேரில் தேர்தல் நிறுத்தி வைக்க கடிதம் அளித்துள்ளனர். ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரி இதை ஏற்க மறுக்கிறார்’ என்றார். இந்த தேர்தல் முடிவுகள் மாலையில் அறிவிக்கப்பட உள்ளன. அதன் பிறகே ராஜா வெற்றி பெறுவாரா என்று தெரியவரும்.