விஏஓ வீடு முன்பு ஒன்றரை மாதம் தர்ணா: நியாயம் கிடைக்காததால் கர்ப்பிணி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
9/15/2017 5:19:27 PM
உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி மல்லிகா. ஓய்வு பெற்ற ஆசிரியர்களான இவர்கள், அதே பகுதியில் தனியார் பள்ளி நடத்தி வருகின்றனர். இவர்களது மகன் நன்மதிமாறன் (25). இன்ஜினிரிங் பட்டதாரியான இவர், உத்திரமேரூர் அடுத்த பினாயூரில் விஏஓவாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நன்மதிமாறன், வந்தவாசியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது, உடன் படித்த வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி (25) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இந்த விவகாரம், இரு வீட்டாருக்கும் தெரியவர படிப்பு முடிந்ததும் திருமணம் செய்யலாம் என்று கூறியுள்ளனர். படிப்பு முடிந்த பிறகும் திருமணம் பற்றி பேசியபோது, ‘நிரந்தர வேலை கிடைக்கட்டும்’ என்று நன்மதிமாறன் கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நன்மதிமாறனுக்கு விஏஓ பதவி கிடைத்தது. அதற்கு பிறகு எதுவும் பேசாததால், இதுபற்றி மகேஸ்வரி கேட்டபோது, சமாதானப்படுத்தியுள்ளார். தொடர் வற்புறுத்தலால், நண்பர்கள் வீடு மற்றும் விடுதியில் நன்மதிமாறன், மகேஸ்வரியுடன் தங்கினார். இதில் கர்ப்பம் தரித்ததால் வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார், இருவரிடமும் விசாரித்துள்ளனர். இதையடுத்து, கடந்த மே 16ம் தேதி மாம்பட்டு முத்து மாரியம்மன் கோயிலில் மகேஸ்வரிக்கும் நன்மதிமாறனுக்கும் திருமணம் நடந்தது. மறுநாள் வந்தவாசியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தனர். அப்போது, ‘என் பெற்றோரை சமாதானப்படுத்தி விட்டு உன்னை அழைத்து செல்கிறேன்’ என்று மகேஸ்வரியிடம் கூறி விட்டு நன்மதிமாறன் சென்றார். மாமியார் வீட்டுக்கு நன்மதிமாறன் அவ்வப்போது வந்து சென்றார்.
இதில் மகேஸ்வரி மீண்டும் கர்ப்பம் தரித்தார். இந்த விவகாரம் நன்மதிமாறனின் பெற்றோருக்கு தெரிந்தது. கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மகேஸ்வரி போன் செய்தபோது, ‘விவாகரத்து பெற்று விடலாம்’ என்று நன்மதிமாறன் கூறியுள்ளார். மேலும், செய்யாறு கோர்ட்டில் விவாகரத்து கோரி நன்மதிமாறன் வழக்கு தாக்கல் செய்தார். கோர்ட்டில் ஆஜராகும்படி மகேஸ்வரிக்கு நோட்டீஸ் வந்தது. அதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த மகேஸ்வரி, கடந்த 6ம் தேதி பெருநகர் போலீசில் புகார் கொடுத்து விட்டு மானாம்பதியில் உள்ள கணவர் நன்மதிமாறன் வீட்டு முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் நன்மதிமாறனும் அவரது பெற்றோரும் வீட்டை பூட்டி விட்டு தாங்கள் நடத்தும் பள்ளிக்கு சென்று விட்டனர். அன்று முதல் தனது சொந்த ஊருக்கு செல்வதும் பின்னர், கணவர் ஊருக்கு வந்து அவரது வீட்டின் முன் மகேஸ்வரி வந்து அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவதுமாக இருந்தது.
இதனால் நன்மதிமாறனின் பெற்றோர், ‘வீடு இருந்தால்தானே இங்கு இருப்பார், அதனால் விற்று விடலாம்’ என முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன்படி கடந்த வாரம் ஒரு புரோக்கர் வந்து வீட்டை பார்த்து விட்டு சென்றுள்ளார். கலெக்டர், மாவட்ட எஸ்.பி, பெருநகர் போலீஸ் என பல இடங்களில் மகேஸ்வரி புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நன்மதிமாறனின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பயன் இல்லை. ஒன்றரை மாத போராட்டத்துக்கு எந்த பலனும் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த மகேஸ்வரி, இன்று காலையில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை பார்ப்பதற்காக உறவினர்கள் வந்தனர். அப்போதுதான் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து பெருநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மகேஸ்வரி, அவரது அம்மா மற்றும் கணவருக்கு எழுதி வைத்திருந்த 2 கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ‘என்னை விரட்டி விரட்டி எனது கணவர் காதலித்தார். நான் ஒதுங்கி ஒதுங்கி சென்றேன். எனது கணவர் வற்புறுத்தலாலும் இரு வீட்டாரின் சம்மதத்தாலும்தான் உன்னை காதலித்தேன். உனது பெற்றோர் பேச்சை கேட்டு என்னை வெறுத்தாய். தற்போது, எனது காதல் கணவருடன் ேசர்ந்து வாழ முடியவில்லை. எனது சாவுக்கு முழுக்க முழுக்க எனது கணவர், மாமனார், மாமியார் மற்றும் கணவரின் அக்காதான். என்னை 7 வருடமாக நம்ப வைத்து ஏமாற்றி விட்டனர். அவர்கள் கேட்ட வரதட்சணையை எங்களால் கொடுக்க முடியவில்லை. எனது மாமனாரான ஆசிரியர் ஒரு சாதி வெறி பிடித்தவர். அவரோடு சாதி வெறிக்கு என் வாழ்க்கை பாழாகி விட்டது’ என்று 3 பக்க அளவில் உருக்கமாக எழுதியிருந்தார்.