காஞ்சி நகர தேமுதிக சார்பில் ஐம்பெரும் விழா: 1650 பேருக்கு நலத்திட்ட உதவி: எல்.கே.சுதீஷ் வழங்கினார்
9/15/2017 4:20:26 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகர தேமுதிக சார்பில், காஞ்சிபுரம் காந்தி சாலை, பெரியார் நினைவுத்தூண் அருகில் வறுமை ஒழிப்பு தினம், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்விழா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள்விழா, தேமுதிக 13ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 1650 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என ஐம்பெரும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு, காஞ்சிபுரம் நகர தேமுதிக செயலாளர் சாட்சி சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.
மாவட்ட அவைத்தலைவர் சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் திருமால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபதி, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பெர்ரி மற்றும் நிர்வாகிகள் கமலநாதன், அண்ணாதுரை முன்னிலை வகித்தனர்.
தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு, மூன்று சக்கர சைக்கிள், இட்லி குண்டா, சைக்கிள் உள்ளிட்ட 1650 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் சூழ்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதவிக்கு வர மக்கள் ஆசைப்படுகின்றனர். கடந்த கால தேர்தலின்போது கூட்டணி பேசுவதற்காக என்னை அழைத்தார்கள். மாலை 4 மணிக்கு அழைத்துவிட்டு அதிகாலை 3 மணி நேரம் வரை கூட்டணி குறித்து பேசவில்லை. இதனால் நான் கோபித்து கொண்டு வெளியில் வர முற்பட்டபோது, சசிகலாவும் ஜெயலலிதாவும் பேசினர். அதன்பிறகு 25 எம்எல்ஏ சீட் வழங்கினர்.
இதில் வெற்றிபெற்ற எம்எல்ஏக்களில் 9 பேரை விலை கொடுத்து வாங்கினார்கள். ஆனால் இன்று ஒரு எம்எல்ஏகூட அவர்களது வீட்டில் இல்லாத சூழ்நிலை உள்ளது. மேலும் சொந்த செலவில் பிறந்தநாள் கொண்டாடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் ஒரே தலைவர் விஜயகாந்த் மட்டுமே. அண்ணா மற்றும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுகிற தலைவராகவும் விஜயகாந்த் இருப்பார். இவ்வாறு எல்.கே.சுதீஷ் கூறினார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன், தலைமைக்கழக பேச்சாளர்கள் தம்பி முருகன், முகிலரசன், தீப்பொறி செல்வராஜ், மகாலட்சுமி ஆகியோரும் பேசினர். விழாவில், வட்ட செயலாளர்கள் அக்பர் பாஷா, விஜய், யுவராஜ், தனசேகர், அருணகிரி, மண்ணு, லோகநாதன், அருணாச்சலம், முருகன், ரமேஷ்குமார், பாஸ்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தேமுதிக தலைமை கலை இலக்கிய அணி சார்பில் மதுரை நாராயணன் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சி நடந்தது.