ப்ளூவேல் கேம் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு : குஜராத் மாநில அரசு அறிவிப்பு
9/8/2025 3:28:32 PM
அகமதாபாத் : உலகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் இளைஞர்கள் உயிரை காவு வாங்கிய ப்ளூவேல் கேம் ரஷ்யாவில் 17 வயது சிறுவனால் உருவாக்கப்பட்டது. இந்த கேம் ஏற்கனவே வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு விட்டது. ரஷ்ய இளைஞரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்த கேம் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக அண்மையில் ரஷ்யாவில் ஒரு பெண் கைது செய்யப்பட்டார். இருப்பினும் இந்த கேம் தொடர்ந்து செல்போன் வாயிலாக இளைஞர்களை கவர்ந்து வருகிறது. இந்த விளையாட்டுக்குள் இழுக்கப்படுபவர்கள் தினமும் ஏதேனும் ஒரு சவாலை மேற்கொள்ள வேண்டும். அதனை வீடியோ எடுத்து அப்லோட் செய்ய வேண்டும். இந்த சவால் பல சமயங்களில் உயிரை பறிப்பதாக இருப்பதால் தற்போது இந்த கேமுக்கு இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள், இளைஞர்கள் குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விளையாட்டை கம்ப்யூட்டர் மற்றும் செல்போனில் நடத்தும் அட்மினஸ்ட்ரேட்டர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் பிரதிப்சின் ஜடேஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: குஜராத்தில் ப்ளூவேல் கேம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் படி அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் எஸ்பிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கேமின் மோசமான விளைவுகள் குறித்து அறிந்து கொள்ள இலவச போன் நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வி நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தங்களது குழந்தைகள் இந்த கேம் விளையாடுவது தெரிந்தால் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தனி ஹெல்ப்லைன் உருவாக்கப்பட்டுள்ளது. ப்ளூவேல் நடத்துபவர்கள் குறித்து தகவல் அளித்தால் அவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும். அவர்களது பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.