எழும்பூரில் நள்ளிரவு பரபரப்பு இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் மீது தாக்குதல்: பைக்கில் தப்பிச்சென்ற 3 பேருக்கு வலை
9/5/2025 4:10:00 PM
சென்னை:சென்னை கீழ்ப்பாக்கம், நியூ மண்டபம் சாலை, டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர்(28). இவர் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளராக உள்ளார் ேநற்று இரவு 10.30 மணி அளவில் சிந்தாதிரிப்பேட்டை மங்கபதி தெருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள பூந்தமல்லி சாலையில் செல்லும்போது, பின்னால் பைக்கில் வேகமாகவந்த 3 பேர், பாலசந்தரை வழிமறித்து இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் பாலசந்தர் ‘’காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’’ என்று அலறி கொண்டு ஓடினார். ஆனால் மர்ம நபர்கள் அவரை விடாமல் ரயில்வே அலுவலகம் வரை துரத்தி சென்று சரமாரி தாக்கினர். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒன்று கூடி ஓடிவருவதை பார்த்த மர்ம நபர்கள், பாலசந்தர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன்கள் இரண்டையும் பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவத்தில் பாலசந்தர் தலை, முகம் என உடல் முழுவதும் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் எழும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாலசந்தரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.பாலசந்தர் அளித்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த மக்கள் கட்சி மாநில செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் மருத்துவமனை வளாகத்தில் கூடியதால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.