கவர்னர் அழைக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்: டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் மிரட்டல்
9/5/2025 4:03:18 PM
புதுச்சேரி: இரண்டு நாட்களுக்குள் கவர்னர் அழைக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மாற்ற வேண்டும் என்பதில் டிடிவி தரப்பு உறுதியாக உள்ளது. ஆளும் அரசை அடிபணிய வைக்க எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பலத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் அணி மாறுவதை தடுக்கும் வகையில் புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் சொகுசு விடுதியில் கடந்த 22ம் தேதி முதல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முதலில் 18 எம்எல்ஏக்கள் மட்டுமே சொகுசு விடுதியில் தங்கியிருந்தனர். பின்னர் விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகியோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுடன் இணைந்து கொண்டனர். இதன்காரணமாக, எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது. கவர்னர் மாளிகையில் இருந்து அழைப்பு வரவில்லை. இதனால் எம்எல்ஏக்கள் அதிருப்தியடைந்தனர்.அவர்களை டிடிவி தினகரன் நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினார். தொடர்ந்து 15வது நாளாக விடுதியில் தங்கியிருந்ததால், சோர்வடைந்த எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக விடுதியை விட்டு வெளியேறினர். தினகரன் அனுமதி பெற்றே தொகுதிக்கும், சொந்த வேலை காரணமாக சென்று வருவதாக கூறினர். தினகரன் கூடாரம் காலியாகி வருவதாக எடப்பாடி தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்திருந்தனர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று 4 எம்எல்ஏக்கள் மட்டும் விடுதியில் தங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் சொகுசு விடுதி பரபரப்பின்றி காணப்படுகிறது.
இதற்கிடையே இன்று சென்னையில் பழனிச்சாமி தலைமையில் நடைபெறவுள்ள எம்எல்ஏக்கள் கூட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியானது. இதனை டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் மறுத்துள்ளனர். விடுதியை விட்டு வெளியேறிய எம்எல்ஏக்கள் மீண்டும் புதுச்சேரி திரும்பியுள்ளனர். தற்போது 20 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதுவரை இங்கு வராத பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல் இன்று எம்எல்ஏக்களை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இரண்டு நாட்கள் கழித்து நேற்று காலை தங்க. தமிழ்செல்வன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
பின்னர் சொகுசு விடுதிக்கு வெளியே நிருபர்களை சந்தித்த தங்க. தமிழ்செல்வன் கூறுகையில்,’தகுதி நீக்கம் செய்வது தொடர்பான சபாநாயகர் அனுப்பியுள்ள நோட்டீசுக்கு பதில் அளிப்பதற்காக 5 எம்எல்ஏக்கள் இன்று சென்னை செல்கின்றனர். சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கவுள்ளனர். முதல்வர் மாற்றம் குறித்து கவர்னர் இரண்டு நாட்களுக்குள் அழைத்து பேசாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இன்று சென்னையில் நடைபெற உள்ள எம்எல்ஏக்கள் கூட்டம் கண் துடைப்புக்காக நடத்தப்படுகிறது. எங்கள் அணியை சேர்ந்தவர்கள், யாரும் கூட்டத்தில் கலந்துகொள்ளமாட்டார்கள். எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்டுள்ள பிளவை சரிசெய்ய முடியாது. நாங்கள்தான் கட்சியை காப்பாற்றுவோம்’ என்றார்.