இலங்கை நீதிமன்றம் விடுவித்த 80 தமிழக மீனவர்கள் காரைக்கால் வந்தனர்
9/5/2025 3:51:08 PM
காரைக்கால் : புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் நாகை மாவட்டங்களை சேர்ந்த 80 மீனவர்கள், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் வெவ்வேறு தேதிகளில், வெவ்வேறு இடங்களில் மீன் பிடித்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். 80 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என, மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வந்தது.
இந்நிலையில் இருநாட்டு நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்கள் 80 பேரை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்தது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 48 மீனவர்கள், நாகை மாவட்டத்தை சேர்ந்த 8 பேர், ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 பேர், மண்டபம் பகுதியை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 80 பேரை கடந்த ஆக.31ம் தேதி இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் இலங்கை கடற்படையினர் மூலம், நேற்று சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். இந்திய கடலோர காவல்படையினர் நேற்று இரவு கப்பலில் 80 பேரையும் காரைக்காலில் உள்ள மார்க் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். காரைக்கால் வந்த 80 மீனவர்களை, நாகை கலெக்டர் சுரேஷ்குமார், எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் வரவேற்றனர்.