டெல்லி ஜந்தர் மந்தரில் எச்சில் இலை உணவை தின்று தமிழக விவசாயிகள் போராட்டம்
9/5/2025 3:48:38 PM
புதுடெல்லி : டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் எச்சில் இலை உணவை தின்று போராட்டம் நடத்தினர்.நதிகளை இணைத்தல், கடன் தள்ளுபடி, காவிரி மேலாண் வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் கடந்த ஜூலை 16ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
52வது நாளான இன்று ஜந்தர் மந்தரில் விவசாயிகள் கோவணத்துடன் வந்து எச்சில் இலை உணவை தின்னும் போராட்டம் நடத்தினர். அய்யாக்கண்ணு கூறுகையில், விவசாயம் அழிந்து நஷ்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கவில்லை. விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை தரவில்லை.
இந்தியாவில் உள்ள நதிகளை இணைத்து காவிரியில் தண்ணீர் தரவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யவில்லை. தற்போது விவசாயிகளை எச்சில் இலை உணவை சாப்பிடும் நிலைக்கு தள்ளிவிட்டதை மத்திய அரசுக்கு உணர்த்தும் விதமாக இந்த போராட்டம் நடத்துகிறோம் என்றார்.