பணப்புழக்கம் அதிகமாக நடமாடியதை தொடர்ந்து டிராவல்ஸ் அதிபர் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
9/5/2025 3:47:04 PM
சென்னை: பணப்புழக்கம் அதிகளவில் நடமாடுவதாக வந்த தகவலை தொடர்ந்து டிராவல்ஸ் அதிபர் வீடு, அலுவலகத்தில் ேநற்று நள்ளிரவு முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் ரூ.2.75 ேகாடி பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கியது.சென்னை வேளச்சேரி வி.ஜி.பி. அவின்யூ, திருவிதி அம்மண் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழன்(35). இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய நிறுவனத்தில் ஆம்னி பேருந்து, சொகுசு கார் என 50க்கும் மேற்பட்ட வாகனம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டிராவல்ஸ் அதிபர் தமிழனிடம் அதிகளவில் பணப்புழக்கம் நடமாடியதாக உளவுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று இரவு வேளச்சேரி போலீசார் தமிழன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பணம் இருப்பது குறித்து உங்களிடம் நான் கூற முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வேளச்சேரி போலீசார் அதிகளவில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்படி 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழு டிராவல்ஸ் நிறுவன அதிபர் தமிழன் வீடு மற்றும் அதே தெருவில் உள்ள அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அலுவலகம் மற்றும் வீட்டில் ரூ.2.75 கோடி பணம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதில் ரூ.2 கோடி புதிய ரூ.2000 நோட்டுக்கள் ஆகும். இதையடுத்து பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பல முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான கணக்கு வழக்குகள் குறித்து தமிழன் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் தமிழன் வாகனம் வாங்கியதற்கு மாத தவணை கட்டுவதற்காக இந்த பணத்தை வைத்திருந்ததாக கூறியுள்ளார்.
ஆனால் ஒரே சீரியல் வரிசையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் இந்த பணம் எங்கிருந்து வந்தது. வங்கியில் ரூ.2 லட்சத்திற்கு மேல் பணம் பறிமாற்றம் செய்யப்படுவதில்லை. அப்படி இருக்க ரூ.2.75 கோடி பணம் எப்படி வந்தது. டிராவல்ஸ் நிறுவனம் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு முறையாக வருமான வரி கட்டப்பட்டுள்ளதா? அனைத்து வாகனங்களும் யார் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.