முதல்வர் எடப்பாடி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: 110 பேர் பங்கேற்பு: தினகரன் அணி பதவி பறிக்க முடிவு
9/5/2025 3:46:14 PM
சென்னை: முதல்வர் எடப்பாடி தலைமையில் சென்னையில் இன்று காலை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் 110 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. இதனால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதிமுக தற்போது எடப்பாடி அணி, டி.டி.வி.தினகரன் அணி என்று செயல்பட்டு வருகிறது. டி.டி.வி.தினகரன் அணியில் 21 எம்எல்ஏக்கள் தற்சமயம் உள்ளனர். அவர்கள் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 28ம் தேதி அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமை கழக நிர்வாகிகள் என சுமார் 250 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 80 எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
அதிமுகவில் மொத்தம் 135 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் உள்ளனர். மீதமுள்ள 3 கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், சபாநாயகர் தவிர மொத்தம் 110 அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி அணிக்கு தற்போது ஆதரவு அளித்து வருகின்றனர். ஆட்சிக்கு மெஜாரிட்டி தேவை என்றால் 117 எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டும். தற்போது 110 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதால் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு மேலும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே தேவை. இந்த நிலையில், கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி கூட்டிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.அந்த கூட்டத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழுவை வருகிற 12ம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள வாரு கல்யாண மண்டபத்தில் கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டு அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அந்த கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ெசப்டம்பர் 5ம் தேதி(இன்று) காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அதிமுகவின் அனைத்து எம்எல்ஏக்களும் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வரும் 21 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க அவசர அழைப்பும் விடுக்கப்பட்டது. அழைப்பு விடுக்கப்பட்டதால் அவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் எம்எல்ஏக்கள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு காலை 9 மணி முதல் வர தொடங்கினர். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டதால் வந்த எம்எல்ஏக்கள் அங்கு சென்றனர். விழாவை முடித்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 11 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். சரியாக காலை 11 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கினார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எம்எல்ஏக்கள், என 110 பேர் கலந்து கொண்டனர்.ஆனால், அழைப்பு விடுக்கப்பட்டும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இரு பக்கமும் ஆதரவு என்று கூறப்பட்ட வில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா, திருப்பரங்குன்றம் போஸ் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் எம்எல்ஏக்கள் தங்களுடைய குறைகளை தெரிவித்தனர். அதனை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதியளித்தார். மேலும் கூட்டத்தில் 12ம் தேதி நடைபெற உள்ள அதிமுக ெபாதுக்குழு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. மேலும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்காத 21 எம்எல்ஏக்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது, அவர்களின் பதவியை பறிப்பது போன்ற நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சபாநாயகரிடம் மீண்டும் அரசு கொறடா மூலம் புகார் கொடுக்கப்பட்டு அவர்களின் பதவியை பறிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எம்எல்ஏக்கள் கூட்டத்தைத் தொடர்ந்து 12 மணிக்கு அதிமுக நிர்வாகிகள், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதிலும் 12ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு, செயற்குழு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் 3200 பேர் உள்ளனர். அவர்களை கண்டிப்பாக கூட்டத்தில் பங்கேற்க அழைத்து வர வேண்டும் என்று கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் சசிகலா, டி.வி.தினகரனை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. அதிமுக நிர்வாகிகளை டி.டி.வி.தினகரன் நீக்கியதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவரது இந்த நீக்கம் செல்லாது. ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அந்த பதவியில் நீடிப்பார்கள். எனவே, தொடர்ந்து கட்சி பணியாற்றுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது. அது மட்டுமல்லாமல் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.