பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
9/5/2025 3:34:46 PM
புதுடெல்லி: பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீத்தாராமன், முப்படைகளின் தலைமை தளபதிகளை சந்தித்து பேசினார். ராணுவத்தை நவீனப்படுத்துவது, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தளபதிகளுடன் ஆலோசித்தார்.மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சராக பதவி வகித்த நிர்மலா சீத்தாராமன், தற்போது பாதுகாப்பு துறை அமைச்சராகியுள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு இந்த பதவியை வகிக்கும் பெண் அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு துறைக்கு அமைச்சராகியுள்ள சீத்தாராமன், நேற்று முப்படைகளின் தலைமை தளபதிகளை சந்தித்து பேசினார். அவரது இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில் ராணுவ தலைமை தளபதி விபின் ராவத், விமானப்படை தலைமை தளபதி தனோவா, கடற்படை தலைமை தளபதி சுலின் லாம்பா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
பாகிஸ்தான், சீனா நாடுகளின் அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில், ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றை நவீனப்படுத்துவது, எதிர்கொள்ளும் சவால்கள், உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. பாதுகாப்பு துறையை கூடுதலாக கவனித்து வந்த நிதியமைச்சர் அருண்ஜெட்லி, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ளார். அவர் நாளை டெல்லி திரும்பிய பிறகு, பாதுகாப்பு துறைக்கான பொறுப்புகளை நிர்மலா சீத்தாராமன் ஏற்றுக்கொள்கிறார்.