புதுவை சொகுசு விடுதியில் இருந்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 7 ஆனது: தினகரன் அதிர்ச்சி
9/4/2025 4:01:59 PM
புதுச்சேரி: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும், ஆளுனர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் கடந்த மாதம் 22ம் தேதி புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் சொகுசு விடுதிக்கு வந்து தங்கினர். பின்னர் விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகியோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து சொகுசு விடுதிக்கு வந்து தங்கினர். இதனால் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது.ஆளுனர் மாளிகையில் இருந்து அழைப்பு வரும் என காத்திருந்த நிலையில், ஆளுனர் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும், இது உட்கட்சி பிரச்னை எனவும் கூறிவிட்டார். இதையடுத்து இந்த விவகாரத்தில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. தொகுதி மக்களை சந்திக்க முடியாமலும் டிடிவி தினகரனின் அடுத்த கட்ட நடவடிக்ைக என்ன? என்று தெரியாமலும் எம்எல்ஏக்கள் குழம்பி போய் உள்ளனர்.
இந்நிலையில் எம்எல்ஏக்கள் உமாமகேஸ்வரி, ெஜயந்தி, சுந்தர்ராஜ் ஆகியோர் சொந்த வேலை காரணமாக கடந்த 2 தினங்களுக்கு முன் சொகுசு விடுதியை விட்டு வெளியேறினர். நேற்றுமுன்தினம் மேலும் 2 எம்எல்ஏக்கள் தொகுதிக்கு சென்றனர். இதுவரை 5 எம்எல்ஏக்கள் திரும்பி சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மேலும் சில எம்எல்ஏக்கள் விடுதியை விட்டு வெளியேறியதாகவும், தற்போது சொகுசு விடுதியில் 7 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் நடைபயிற்சிக்கு வரும் எம்எல்ஏக்கள் யாரும் இன்று வரவில்லை. இதற்கிடையே முதல்வர் பழனிச்சாமி நாளை (5ம் தேதி) சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் கலந்துகொள்ள வருமாறு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கும் அவர் அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளார். இதையடுத்து பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. விடுதியை விட்டு வெளியேறி தொகுதியில் இருக்கும் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி கூட்டும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எடப்பாடி தரப்பில் கூறி வருகின்றனர். இதனால் டிடிவி தினகரன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து சொகுசு விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏக்களிடம் கேட்டபோது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை தினகரனுக்கு தெரிவித்துள்ளோம். அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ? அதன்படி செயல்படுவோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 2 நாளில் தகவல் தெரிவிப்பதாக ஏற்கனவே தினகரன் கூறியுள்ளார். வெளியேறிய எம்எல்ஏக்கள் ஒவ்ெவாருவராக விடுதிக்கு மீண்டும் திரும்புவார்கள் என்றனர்.