டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் ராக்கிங் செய்த 5 மாணவர்கள் சஸ்பெண்ட்
8/25/2017 3:17:50 PM
புதுடெல்லி: டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் முதலாண்டு மாணவர்களை ராக்கிங் செய்த 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியான எய்ம்ஸில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், விடுதியில் தங்கி படிக்கும் முதலாண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்வதாக, கல்லூரி நிர்வாகத்துக்கு புகார் வந்தது.
இதுகுறித்து விசாரித்த கல்லூரி நிர்வாகம், ராக்கிங்கில் ஈடுபட்ட 5 மாணவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்தது. இந்த நடவடிக்கையால் மூன்று மாதங்களுக்கு அவர்கள் கல்லூரிக்கு செல்ல முடியாது. எய்ம்ஸ் மருத்துவமனையில், ராக்கிங்கை தடுப்பதற்கென தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. ராக்கிங் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
நாடு முழுவதும் கல்லூரிகளில் நடைபெறும் ராக்கிங்குகளால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மருத்துவ கல்லூரிகளில் ராக்கிங் கொடுமை அதிகமாக உள்ளது. இதை தடுக்க கடுமையான சட்டங்கள் உள்ளன. ராக்கிங்கில் ஈடுபடும் மாணவர்களுக்கு 6 மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்க சட்டத்தில் இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.