தொடர் ரயில் விபத்துகளை தடுக்க பாதுகாப்பு பணியில் 2 லட்சம் பேர்: ரயில்வே அமைச்சகம் திட்டம்
8/24/2017 3:26:25 PM
புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தில் அண்மையில் அடுத்தடுத்து நடந்த இரு ரயில் விபத்துகளின் எதிரொலியாக ரயில்வே வாரியத்தின் தலைவர் ஏ.கே.மிட்டல் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பதவி விலக போவதாக அறிவித்துள்ளார். ரயில் விபத்துகளை தடுக்கும் நோக்கில் இது தொடர்பான பாதுகாப்பு பணியில் மேலும் 2 லட்சம் பேரை புதிதாக நியமிக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாஜ அரசு மத்தியில் அமைந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் 135 ரயில் விபத்துகள் நடந்துள்ளன.
60 சதவீத உயிரிழப்புகள் ஆளில்லாத ரயில்வே கிராசிங்குகளில் நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 2019ம் ஆண்டுக்குள் அனைத்து ஆளில்லாத லெவர் கிராசிங்குகளையும் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர கட்டுமானத்தில் ஏற்படும் கவனக்குறைவால் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் கட்டுமான பணிகளுக்காக ரூ. 4 லட்சம் கோடி செலவிட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ரயில் பாதைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் பாதுகாப்பு பணிகளில் தொய்வை ஏற்படுத்துகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள ரயில் பெட்டிகளின் உற்பத்தி கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது. பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு முதல் துருபிடிக்காத, தீப்பிடிக்காத, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ரயில் பெட்டிகளை ஐசிஎப் தயாரித்து வழங்க உள்ளது. பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்கள் காலி இடங்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. தற்போது பாதுகாப்பு பணிகளுக்காக 37 ஆயிரம் பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 1 நிலவரப்படி மொத்த பாதுகாப்பு பணியாளர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 35 ஆயிரமாக உள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக மேலும் 2 லட்சம் பேர் பணி அமர்த்தப்பட உள்ளனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.