உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை பஸ் மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி
8/15/2017 3:37:25 PM
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் தமிழகத்துக்கு ஆன்மீக சுற்றுலா வந்த உபி மாநிலத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஒரு காரில் குடும்பத்தினருடன் தமிழ்நாட்டில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்றனர். இந்த காரை ரவி(40) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த இருவேல்பட்டு என்ற இடத்தில் செல்லும் போது திடீரென நிலை தடுமாறி கார் சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி எதிரே சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரை ஓட்டி வந்த ரவி மற்றும் காரில் வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சோம்நாத்(65), அவரது மனைவி சாதனா(54), மகன் முனிலால்(35) மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் சோம்நாத், சாதனா, முனிலால், டிரைவர் ரவி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த இரண்டு குழந்தைகளும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்கின்றனர்.