இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு பலி 48 ஆனது: மலைப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை
8/14/2017 6:11:53 PM
மாண்டி: இமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, மிம்ன்சார வசதி, செல்போன் உள்ளிட்ட வசதிகள் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.தவிர கன மழையால் மக்களின் வீடுகள், விவசாய நிலங்கள் , கால் நடைகள் என உடைமைகளை இழந்து மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகிறார்கள். குறிப்பாக இமாச்சல பிரதேச மாநிலம் கன மழையால் பயங்கர பாதிப்பை சந்தித்து இருக்கிறது. இமாச்சல மாநிலம் பெரும் பகுதி மலைப்பரப்புகளால் ஆனதால் கன மழைக்கு பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக மாநிலத்தின் முக்கிய மாவட்டமான மாண்டியிலுள்ள பதான் கோட் பகுதிக்கு செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலையில் சென்று கொண்டியிருந்த பேருந்துகள், வாகனங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கியது. நிலச்சரிவு உண்டாகி மலையில் இருந்த மண் மற்றும் பாறைகள் உருண்டு வாகனங்கள் மீது விழுந்ததால், வாகனங்கள் நிலைதவறி 900 அடிப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பேருந்து மற்றும் கார்களில் பயணமான நபர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள். பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து பள்ளத்தாக்கில் கிடந்த வாகனங்களை மீட்டு வருகின்றனர். நிலச்சரிவில் கவிழ்ந்த வாகன விபத்தில் இதுவரை 48 நபர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.
மேலும் மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு வந்த போதும், தொடர்ந்து பெய்து வரும் மழையால் மீட்புக் குழுவினரால் துரிதமாக செயல்பட முடியவில்லை. பள்ளத்தாக்குப் பகுதி என்பதால் மழை நீர் வெள்ளமாக பாய்ந்து வருவதாலும், அடிக்கடி பாறைகள், மண்கள் சரிந்து விழுந்து கொண்டே இருக்கிறது. இதனால் மீட்புக் குழுவினர் மத்தியில் தேக்கம் உண்டாகி இருக்கிறது. நிலச்சரிவு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ருபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார் முதல்வர் வீரபத்திரா சிங்.
மேலும் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார். விட்டு விட்டு பெய்து வரும் மழையால் மேலும் பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்பட்டு மண் சரிவும் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் இமாச்சல மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது இதனால் அம்மாநில அரசு சிக்கலான மலை வழிப் பாதைகளில் வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளது.