மக்கள் துன்பப்படும்போது ரஜினி, கமல் செய்த உதவி என்ன? அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
8/14/2017 3:35:07 PM
திருமலை: அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் மக்கள் துன்பப்படும்போது ரஜினியும் கமலும் செய்த உதவிகள் என்ன என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் ேகாயிலுக்கு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் அரசியல் நிலைமை நன்றாக உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ெஜயலலிதா வழிகாட்டுதலின்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடக்கிறது.
ரஜினி, கமல் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் மக்களின் நம்பிக்கை இருக்கவேண்டும். எம்ஜிஆரைப்போல் சிவாஜி, பாக்யராஜ், டி.ராஜேந்தர் என பலர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தனர். அவர்களின் நிலை குறித்து ரஜினியும், கமலும் தெரியாதவர்கள் அல்ல. எம்ஜிஆர் சினிமாவில் நடித்துக்கொண்டே தனது கொள்கை, கட்சிக்கொடிகளை சினிமாவில் காட்டி நடித்தார். ஏழை எளியவர்களுக்காக பாடுபட்டார். ஆனால் மக்கள் துன்பப்படும்போது ரஜினி, கமல் என்ன உதவி செய்தார்கள்?. எளிய மக்களுக்காக வாரி வழங்கி அவர்களின் நலனுக்காக பாடுபட்டவர் எம்ஜிஆர். இவ்வாறு அவர் கூறினார்.