அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லை சென்னையை சேர்ந்தவர் பரிதாப சாவு: ‘ரமணா பட பாணியில் சிகிச்சை’
8/14/2017 3:20:10 PM
ஆம்பூர்: சென்னை வேங்கைவாசல் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(65), தொழிலதிபர். இவரது நண்பர் சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்த சந்தானம்(73). இவர்கள் நேற்று சென்னையில் இருந்து பெங்களூருக்கு காரில் புறப்பட்டனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் அருகே பகல் 12.30 மணியளவில் வந்தபோது லாரி இவர்களது கார் மீது மோதியது. காரில் வந்த இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நீண்ட நேரமாகியும் டாக்டர் யாரும் இல்லாததால் சிகிச்சை அளிக்கவில்லை. இந்நிலையில் சந்தானத்திற்கு தெரிந்த சிலர் அங்கு வந்து டாக்டர்கள் குறித்து அங்கு பணியில் இருந்தவர்களிடம் கேட்டனர். அப்போது திடீரென ராஜ்குமார் இறந்தார். இதை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் சிலர், டாக்டர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்படி இறந்த ராஜ்குமாருக்கு இசிஜி கருவியை பொருத்தி இதய துடிப்பை பதிவு செய்ய துவங்கினர். மேலும், இறந்தவரின் திறந்த கண்களை மூடி அவர் மயக்கத்தில் இருப்பதாக தெரிவித்தனர்.
அவருடன் வந்த சந்தானம் ஆம்புலன்ஸ் இல்லாததால் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டு பின்னர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன்பின்னரே ராஜ்குமார் இறந்ததாக அங்கு பணிபுரியும் நர்ஸ் உறவினர்களிடம் தெரிவித்தார். சுமார் 2.30 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்படாததால் தொழிலதிபர் ராஜ்குமார் இறந்தார்.
ரமணா படத்தில் வரும் காட்சியை போல் இறந்தவருக்கு டாக்டர்கள் உத்தரவுப்படி ஊழியர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆம்பூர் தாலுகா ராலகொத்தூரை சேர்ந்த ராஜேஷின் மகள் வைஷ்ணவி(13) மூச்சுதிணறல் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவருக்கும் டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாந்தி சம்பவ இடத்துக்கு வந்தார். அப்போது அவரது வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது பேசிய இணை இயக்குனர், ‘ஆம்பூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்களுக்குள் பனிப்போர் நடந்து வருகிறது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிவருவதால் உரிய நேரத்தில் அவர்கள் பணியில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.