ராட்சத கிணறு விவகாரம்: ஓபிஎஸ்சுக்கு எதிராக 18 கிராம மக்கள் போராட்டம்
8/9/2025 5:10:43 PM
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லெட்சுமிபுரம் கிராமத்தில் குடிநீர் பிரச்னை உள்ளது. குடிநீர் பிரச்னைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் என கூறும் மக்கள், தண்ணீர் பிரச்னைக்கு காரணமான ராட்சத கிணற்றை கிராமத்திற்கு ஒப்படைக்கும்படி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.நேற்றுமுன் தினம் 500க்கும் மேற்பட்ட பெண்கள் குத்துவிளக்கேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 5 மணியளவில் லெட்சுமிபுரம் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனாட்சிபுரம், கெண்டிக்காரன்பட்டி, மதுராபுரி, வடவீரநாயக்கன்பட்டி, அன்னஞ்சி உட்பட 18 கிராம மக்கள் லெட்சுமிபுரம் கிராமத்திலிருந்து வரட்டாறு வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மனித சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிணற்றை கிராமத்திற்கு ஒப்படைக்கும் வரை தொடர்ந்து பல்வேறு அறவழி போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் ெதரிவித்தனர்.
லட்சுமிபுரம் கிராம மக்கள் சார்பில் இன்று வடபுதுப்பட்டியில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. வரட்டாறை ஓடையாக மாற்றியதால் 18 கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஓபிஎஸ்சுக்கு எதிராக போராட 18 கிராம மக்களுக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட உள்ளது.